கல்முனையில் மே தினக்கூட்டம் கிழக்கு சுகாதார அமைச்சர் பிரதம அதிதி
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் மே தினக் கூட்டம் எதிர்வரும் முதலாம் திகதி வெள்ளிக்கிழமை கல்முனை மாநகரில் நடைபெறவுள்ளது.
அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கம் தமது இணை நிறுவனங்களான வடகிழக்கு மாகாண ஜீவோதய நலன்புரி நிறுவனம், வடகிழக்கு மாகாண அரச பொது ஊழியர் சங்கம், அகில இலங்கை மக்கள் ஜனநாயகக்கட்சி, ஸ்ரீலங்கா அரச சேவை மற்றும் மாகாண அரச சேவை தொழிற்சங்க சம்மேளனம் என்பவற்றுடன் இணைந்து இந்த மே தினக் கூட்டத்தை வெகு சிறப்பாக நடத்தவிருக்கின்றது.
சங்கத்தினால் 21ஆவது வருடமாக நடத்தப்படும் இந்த மே தினக் கூட்டம் பொது ஊழியர் சங்கத்தலைவரும் தொழிற்சங்கவாதியுமான எஸ். லோகநாதன் தலைமையில் நடைபெறும்.
கல்முனை வை.எம்.சீ.ஏ. மண்டபத்தில் நடைபெறவிருக்கும் இந்த மே தினக் கூட்டத்தில் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம். மன்சூர் பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண சபையின் தமிழரசுக் கட்சி உறுப்பினர் பேராசிரியர் எம். இராஜேஸ்வரன் கெளரவ அதிதியாகவும் கலந்து கொள்வர்.
அத்துடன் பிரபல இலக்கியப் புரவலரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான சட்டத்தரணி ஏ.எம். பதுறுதீன், சிரேஷ்ட ஊடகவியலாளர் கலாபூஷணம் ஏ.எல்.எம். சலீம் ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.
மேலும் இந்த மே தினக் கூட்டத்தில் விசேட அம்சமாக அரச சேவையிலிருந்து ஓய்வுபெற்ற சங்க உறுப்பினர்களான எஸ். கேதீஸ்வரன், யூ.எல்.எம்.அலியார், கே. விக்னேஸ்வரன் ஆகிய மூன்று தொழிலாளர்களைப் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் இடம்பெறவுள்ளது.
நல்லாட்சியில் தொழிலாளர் உரிமைகள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனும் முதன்மைத் தொனிப்பொருளில் இடம்பெறவிருக்கும் இந்த மே தினக் கூட்டத்தில் இனப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வைத் துரிதப்படுத்தி வழங்குமாறு அரசைக் கோரும் தீர்மானம் உட்பட பல தீர்மானங்கள் மே தினத் தீர்மானங்களாக முன்வைக்கப்படவுள்ளன.
இதேவேளை அம்பாறை, மட்டக்களப்பு, திருமலை மாவட்டங்களுட்பட வடமாகாணத்தின் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா, முல்லைத்தீவு, மன்னார் மாவட்டங்களிலிருந்தும் வருகை தரும் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க இணைப்பாளர்கள் , அமைப்பாளர்கள், முக்கிய உறுப்பினர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்ளவிருப்பதாக சங்க பொதுச் செயலாளர் எம்.எம்.ஏ. வகாப் தெரிவித்தார்.
இதேவேளை இந்த மே தினக் கூட்டத்தின் இறுதியில் அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தின் 21 ஆவது வருடாந்தப்பொதுக் கூட்டமும் சங்க இணை நிறுவனமான வடகிழக்கு மாகாண ஜீவோதய நலன் புரி நிறுவனத்தின் 18ஆவது வருடாந்தப் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளதாக பொதுச் செயலாளர் வகாப் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment