கிழக்கு மாகாண சபைக்கான முதலமைச்சராக ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசை சேர்ந்த ஒருவர் விரைவில் நியமனம்- ரவூப் ஹக்கீம் தெரிவிப்பு

இணைந்த வடக்கு கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் மர்ஹும் எம்.வை.எம். மன்சூரின் 25 ஆவது வருட நினைவு தின நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு உரையாற்றும் போதே மேற்கண்ட தகவலை அவர் வெளியிட்டார். தென்கிழக்குப் பல்கலைக்கழக உதவிப் பதிவாளர் மன்சூர் ஏ.காதர் தலைமையில் சம்மாந்துறை 'வேர்கள் விழுதுகள்' சமூக நல அமைப்பின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அப்துல் மஜீத் நினைவு மண்டபத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது.
கடந்த அரசுடன் செய்து கொண்ட ஒப்பந்த பிரகாரம் முதல் இரண்டரை வருடங்களுக்கு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கும் , அடுத்த இரண்டரை வருடங்களுக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் முதலமைச்சர் பதவி வழங்கப் பட வேண்டும் என உள்ள நிலையில் இது தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் நடாத்தப் பட்ட பேச்சு வார்த்தையில் ஸ்ரீ லங்கா காங்கிரஸ் முதலமைச்சரைக் கொண்டதான கிழக்குமாகாண சபைக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. இதன் அடிப்படையில் ஐக்கிய தேசியக் கட்சி அங்கத்தவர்களுக்கும் அமைச்சர் பதவிகள் வழங்கப் பட்டு ஆட்சி அமைக்கப் படவுள்ளது.
இதேவேளை கிழக்கில் அமையவுள்ள மாகாண அரசுக்கு தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒத்துழைப்பும் வழங்கப் பட வேண்டும் எனவும் இது தொடர்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு தலைவர் சம்பந்தனுடனும் நாம் பேசுவோம் எனவும் அமைச்சர் ஹக்கீம் தெரிவித்தார். இவ்வைபவத்தில் ராஜாங்க அமைச்சர் எம்.ரீ.ஹசன் அலி உட்பட பலர் கலந்து கொண்டனர்
Comments
Post a Comment