முதலமைச்சர் பதவியை மு.கா.வுக்கு வழங்க சுதந்திரக் கூட்டமைப்பு தீர்மானம்; ராஜினாமாவுக்கும் நஜீப் தயார்!

கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்க ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உயர்மட்டம் ஏகமனதாக தீர்மானித்துள்ளது.
நேற்று  திங்கட்கிழமை மாலை ஐக்கிய மாக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் இடம்பெற்ற கூட்டத்திலேயே இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அறிவுறுத்தலின் பேரில் கூட்டப்பட்ட இவ்விசேட கூட்டத்தில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட பிரதித் தலைவர் நிமல் ஸ்ரீபால டி.சில்வா உட்பட மற்றும் பல முக்கியஸ்தர்களும் கிழக்கு மாகாண முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உட்பட அம்மாகாண சபையின் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களும் பங்கேற்றிருந்தனர்.
இதன்போது கிழக்கு மாகாண சபையின் ஆட்சியை ஸ்திரப்படுத்துவதற்கான அவசியம் வலியுறுத்தப்பட்டு அது தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு ஆட்சியை நிறுவும் பொருட்டு ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசும் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பத்தத்தில் பிந்திய இரண்டரை வருடங்களுக்கு முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரசுக்கு வழங்குவது என குறிப்பிடப்பட்டிருந்தது.
அதனை தற்போது அமுல்படுத்துவதன் மூலம் கிழக்கின் தற்போதைய ஆட்சி இழுபறிக்கு தீர்வினைக் காண முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபாலவின் சார்பிலான ஆலோசனைக்கூட்டத்தில் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டு- அதுவே தீர்மானமாகவும் நிறைவேற்றப்பட்டது.
இதற்கு கிழக்கு மாகாண சபையை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் அனைவரும் இணக்கம் தெரிவித்ததுடன் மு.கா.வுக்கு முதலமைச்சர் பதவியை வழங்கும் பொருட்டு எந்த நேரத்திலும் தாம் ராஜினாமா செய்யத் தயார் என முதலமைச்சர் நஜீப் அப்துல் மஜீத் உறுதியளித்துள்ளார்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று