முஸ்லிம் காங்கிரஸ் சமுகத்துக்கு மீண்டும் தீங்கு இழைத்துள்ளது - சேகு இஸ்ஸதீன்


ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை ஆதரிக்க ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ள தீர்மானம் முஸ்லிம் சமூகத்துக்கிழைத்த மற்றொரு மகா தவறு என அக்கட்சியின் முன்னாள் தவிசாளரும் முன்னாள் அமைச்சருமான எம்.எச்.சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"மைத்திரியை ஆதரிப்பதான முஸ்லிம் காங்கிரஸின் முடிவு சிங்களப் பிரதேசங்களில் சிதறுண்டு வாழும் சகோதர முஸ்லிம்களின் சமாதான வாழ்வையும்இ பாதுகாப்பையும் சந்தியில் நிறுத்தி சிங்கள மக்களின் முஸ்லிம்கள் தொடர்பான அநுதாப உணர்வுகளுக்கு ஆப்பு வைத்துள்ளது.

மு.காவின் நீண்ட கால மெளனத்துக்குப் பின்னர் ஒட்டுமொத்த முஸ்லிம்கள் நலன் சார்ந்த முடிவு வருமென்றே எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த முடிவு அரசாங்கத்தின் நல்லெண்ண நாட்டங்களுக்கு வேட்டு வைத்து சிங்கள - முஸ்லிம் கலவரங்களால் சீற்றமடைந்துள்ள வட-கிழக்கு முஸ்லிம்களின் வடிகான் தேடிய இன மத உணர்வுகளை இதமாக நெறிப்படுத்தும் சகல முயற்சிகளையும் தடுத்துள்ளது.
மாறாக அடுத்த பாராளுமன்றத் தேர்தலின் போது இந்த உணர்வுகளையூட்டி முஸ்லிம்களை பகடை காய்களாக்கி தமது சுய அரசியல் பதவி வியாபார முதலீட்டுக்குப் பயன்படுத்தவுள்ளனர். இந்த முடிவு சமநிலைச் சமுகமான முஸ்லிம்களின் நாசூக்கான நாகரிக விழுமியங்களை நட்டாற்றில் தள்ளி, ஜனாதிபதித் தேர்தலைக் கேலிக்கிடமாக்கியுள்ளதன் மூலம் அடுத்த மகா தவறை முஸ்லிம் காங்கிரஸ் அரங்கேற்றியுள்ளது.
ஜனாதிபதியின் பதவிக் காலங்களை இரண்டு தவணைகளுக்கு மேல் அதிகரிக்க பாராளுமன்றத்தில் தேவைப்பட்ட மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு அப்போது ஆதரவு வழங்கி விட்டு இப்போது தலைகீழாக சிந்திப்பதும் ஒரு தவறே.
2005ஆம் மற்றம் 2010ஆம் ஆண்டுகளில் ஜனாதிபதித் தேர்தல்களிலும் முஸ்லிம் காங்கிரஸ் பிழையான முடிவுகளையே எடுத்ததாக' முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகத் தவிசாளரும், கலைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாண சபையின் எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் ஏற்றுமதி அபிவிருத்தி அமைச்சருமான சட்டத்தரணி எம்.எச். சேகு இஸ்ஸதீன் தெரிவித்தார். 
            

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது