மு.கா. தலைவர் இன்னும் மூக்காத (பருவம்) தலைவராகவே இருக்கிறார்.
ஷேகு இஸ்ஸதீன்!
மனசாட்சியின் விருப்பில் வாக்களிக்க சொன்ன மு.கா. மைத்திரிக்கு மாறியது ஏன்? மஹிந்த முஸ்லிம்களுக்கு ஒரு மருந்து போல” என்கிறார் ஷேகு இஸ்ஸதீன்!
தொடங்கிய போது இருந்த நிலைமை இப் போது இல்லை. நிலைமைகள் மாறிக்கொண்டு வருகின்றன. எதிரணி வேட்பாளர் அமோகமாக வெல்லுவார் என்ற எதிர்பார்ப்பு இப்போது ஆட்டங்காணத் தொடங்கியுள்ளது.
எப்படியாவது மஹிந்தவே வெல்லுவார் என்ற எண்ணம் இப்போது வேறு வடிவெடுக்கத் தொடங்கியிருக்கிறது. நீதியான ஒரு தேர்தலிலும் வாக்குகளின் எண்ணிக்கையில் மஹிந்த வெல்வது உறுதியாகிக் கொண்டு வருகிறது.
உறுதியான ஒரு தலைமைத்துவத்தின் அவசியத்தை மக்கள் உணரத் தொடங்கியுள்ளனர். மைத்திரியின் கிளைக்கு முஸ்லிம் கட்சிகளின் தாவலும் தமிழர் கூட்டமைப்பினர் மைத்திரியை ஆதரிப்பதற்கான தீர்மானமும் எதிர்பார்த்தபடி நடுநிலையாக இருந்த பொதுச் சிங்களப் பெரும்பான்மையினரை தட்டி எழுப்பியுள்ளன.
சிறுபான்மையினர்களின் மைத்திரிக்கான ஆதரவு இன உணர்வுகளைப் பொருட்படுத்தாதிருந்த கணிசமான சிங்களவர்களை மஹிந்தவுக்கு சாதகமாகச் சிந்திக்க வைத்துள்ளது. இன்னும் இரண்டொரு தினங்களில் மஹிந்தவின் வெற்றி உத்தியோகப்பற்றற்ற முறையில் உறுதி செய்யப்படும்.
இப்படித்தான் நடக்கப்போகிறதென்றால், சிறுபான்மைச் சமூகங்கள் மைத்திரிக்கு வாக்களிக்க எடுத்திருக்கும் தீர்மானங்கள் பற்றி மீளாய்வு செய்ய வேண்டிய கட்டாயக் கடமைக்குள் தள்ளப்படுவர்.
குறைந்த பட்சம், இரு வேட்பாளர்களுக்கும் வாக்குகளைப் பகிர்ந்தளிக்கும் நிலைமைக்கு சிறுபான்மைச் சமூகங்கள் தம்மைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
தமிழர் கூட்டமைப்பு இப்படியாக இரு வேட்பாளர்களுக்கும் தமிழர்களின் வாக்குகளைப் பிரித்தழிக்க முன்வராது. இந்தியாவின் ஏவலுக்குச் செவிசாய்க்க வேண்டிய இக்கட்டான நிலைமையில் தமிழர்கள் இருக்கிறார்கள்.ஆனால் முஸ்லிம்களைப் பொறுத்தவரை இப்படியான ஒரு நிர்ப்பந்தம் இல்லை.
பொதுபலசேனா ஜூன் 15 அளுத்கம அட்டூழியங்களும் அதற்கு முன்னரும், பின்னரும் முஸ்லிம்களின் புனித பள்ளிவாசல்கள், மத்ரஸாக்கள், வியாபார ஸ்தலங்கள், ஹலால் உணவு விவகாரம், ஹபாயா ஆடை ஒழிப்பு நிர்ப்பந்தம் போன்ற இன, மத விரோதங்களால் ஆத்திரம் அடைந்துள்ள முஸ்லிம் சமூகம் தமது பூரண எதிர்ப்பைக் காட்டவும், பழிவாங்கவும் எடுத்துள்ள தீர்மானம் இன, மத உணர்வுகளால் மாத்திரமே தூண்டப்பட்ட வையாக இருக்கின்றன.
இலங்கையில் மட்டுமல்ல இந்தியா விலும் முஸ்லிம் விரோத சம்பவங்கள் அயோத்தி விவகாரம் உள்ளடங்கலாக அப்போதைக்கப்போது வெடிக்கவே செய்கின்றன. இஸ்லாத்துக்குள்ளேயே சுன்னி, சியாக் கலவரங்கள் நின்ற பாடாயில்லை.
இதுபோன்ற உண்மைகளைக் கருத்தில் எடாது இன, மத உணர்வுகளுக்கு முற்றும் இடமளித்து ஒரு நாட்டின் ஜனாதிபதியை தீர்மானிக்கும் தேர்தலில் முஸ்லிம்கள் வாக்களிக்க ஒற்றுமைப் பட்டிருப்பது அவர்களது எதிர்கால சமூக வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தலாகவே அமையும்.
மைத்திரி தோற்றுப்போனால் இந்த முஸ்லிம்களின் நிலை கவலைக்கிடமானதாக ஆகிவிடும். அவர்களுக்காகப் பேசுவதற்கு அதிகாரத்தில் பங்கு கொண்ட எந்தத் தலைவரும் இருக்கமாட்டார். பொன்சேகாவைப் போல் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்து அலைக்கழிந்து திரியும் நிலையே மைத்திரிக்கு ஏற்படும்.
மைத்திரி தோற்றால் ஐ.தே.கட்சிக்கு அவர் வேண்டாத விருந்தாகவே இருக்க வேண்டிவரும். சந்திரிகா அம்மையாருக்கு சரணடைவதைத் தவிர வேறு வழி இருக்காது. தம்மையே காப்பாற்றிக்கொள்ள முடியாமல் போகும். மைத்திரிக்கோ, தலைமைத்துவப் போராட்டத்தில் தத்தளித்துப்போகும் ஐ.தே.கவுக்கோ முஸ்லிம்கள் எதிர்கொள்ளச் சாத்தியமான இடர்களுக்கு ஏதும் உதவி செய்ய முடியாமல் போய்விடும்.
மு.கா. தலைவர் இன்னும் மூக்காத (பருவம்) தலைவராகவே இருக்கிறார். கட்சித் தீர்மானம் எடுப்பதற்கு முன்னர் முஸ்லிம்கள் முடிவெடுத்து விட்டதாகக் கூறி இறுதி நேரம் வரை அரசாங்கத்தை அலைக்கழிய வைத்து முதுகில் குத்தியது மாதிரி மு.கா. தலைமைத்துவம் எடுத்த முடிவு முட்டாள்த்தனத்துக்கு முடிசூட்டிய மாதிரி.
ஜூன் 15 அளுத்கம கலவரத்தின் போது பொதுபல சேனாவின் அழிச்சாட்டியங்களை நேருக்கு நேர் எதிர்த்து நிற்க திராணி இல்லாதிருந்தாலும் அரபு முஸ்லிம் நாடுகளின் உதவியை பெற்று அமைதியை பெரிய அளவில் கொண்டுவர மு.கா. தலைவரால் முடிந்ததை முஸ்லிம்கள் மறந்து விட்டார்கள்.
தபால் வாக்களிப்பின் போது ‘மனச்சாட்சிக்கு இடமளித்து’ வாக்களிக்கும்படி பகிரங்க வேண்டுகோள் விடுத்த முஸ்லிம் காங்கிரஸ் நேர் வாக்களிப்பின் போதும் அதே உத்தியைக் கையாண்டு முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களை வாக்களிக்கச் சொல்லியிருக்குமானால் அரசாங்கத்தில் இருந்து கொண்டே அவர்கள் அப்படிச் சொன்னதற்காக அரைவாசிப் பேராவது மஹிந்தவுக்கு வாக்களித்திருக்கக்கூடும்.
எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் முஸ்லிம்கள் வைக்கக்கூடாது என்று அந்தக் காலத்தில் டீ.பீ. ஜாயா கூறிய உபதேசத்தைக் கூடவா மு.கா. தலைமைத்துவம் அறியவில்லை.
அரசாங்கத்தை விட்டு அதிரடியாய் பாய்ந்த மு.கா. தலைவர் கூட முஸ்லிம் சமூகத்தின் நன்மைக்காகவா மைத்திரிக்கு மாறினார். எங்கே, நெஞ்சைத் தொட்டுச் சொல்லட்டும்.
எனவே இந்த நாட்டில் வாழும் முஸ்லிம்கள் அனைவரும் விசேடமாக தென்புறத்து சிங்கள மொழி முஸ்லிம்களும் வாக்களிக்கும் விஷயத்தில் மனக்காயங்களை உயர்த்திப்பிடித்து இன, மத உணர்ச்சியால் மேய்க்கப்படாமல், நமது இளம் சந்ததியினரையும், எதிர்கால இணக்கமான வாழ்வையும் கருத்திலெடுத்து மஹிந்தவின் முக்கியத்துவத்துக்கும் மதிப்புக்கொடுத்துச் செயற்படுவதே சிலாக்கியமானது.
Comments
Post a Comment