ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் தலைமையிலான குழுவுக்கும், ஜனாதிபதி தலைமையிலான அரச குழுவுக்குமிடையில் நேற்று (29) இரவு 7.30 மணியளவில் அலரி மாளிகையில் இடம்பெற்ற சந்திப்பில் நான் கலந்து கொள்ளவில்லை என ஹரீஸ் MP தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கல்முனை நியூஸ் இணையத் தளத்துக்கு தகவல் தருகையில் ,
தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்த வேளை நாளை (29) இரவு 7.30 மணிக்கு எனது தலைமையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருடன் பேச்சுவார்த்தை நடாத்துவதற்காக ஜனாதிபதி அழைப்பு விடுத்திருக்கிறார். எனவே மேற்படி ஜனாதிபதியுடனான சந்திப்பில் கட்டாயம் கலந்து கொள்ளுமாறு தலைவர் எனக்கு அழைப்பு விடுத்திருந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன் பாராளுமன்றத்தில் அரசின் முக்கியஸ்தர்களுடன் எமது சமூகத்தின் கோரிக்கைகள் பற்றி தெளிவுபடுத்தினேன். அதில் குறிப்பாக கரையோர மாவட்டம் தொடர்பில் அரசாங்கம் பூச்சாண்டி காட்டுவது போல் மேலதிக அரசாங்க அதிபரை நியமித்து விட்டு முஸ்லிம்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு விட்டதாக காட்ட முற்படுவதை ஏற்றுக்கொள்ள முடியாது என தலைவரிடம் எடுத்துக் கூறினேன்.
இவ்வாறான சூழ்நிலையில் ஜனாதிபதியுடனான சந்திப்பில் கலந்து கொள்ள எனது மனச்சாட்சிக்கு உறுத்தலாக உள்ளது. எனவே என்னை வற்புறுத்த வேண்டாம் என தலைவரிடம் வேண்டினேன்.
எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பாக கட்சி இன்னும் ஆழமாக சிந்திப்பதுடன் மக்களின் அபிப்பிராயங்களை உள்வாங்கி முடிவெடுக்க வேண்டும் என தலைவருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளேன்.
மேலும் எனது முகநூலில் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக முகநூல் நண்பர்களின் அபிப்பிராயங்களை கோரியிருந்தேன். அதனடிப்படையில் 300க்கும் மேற்பட்டவர்கள் எனது முகநூலில் பதிவுகளை மேற்கொண்டுள்ளதுடன் அவர்களின் இத்தேர்தல் தொடர்பிலான நிலைப்பாட்டினையும் தலைவருக்கு எடுத்துக் கூறினேன் என்றார் .
Comments
Post a Comment