முஸ்லிம்களிடம் மனிப்பு கோருகிறார் அமைச்சர் ராஜித
அளுத்கமயில் இனவாதிகள் மேற்கொண்ட காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் நாட்டின் பொருளாதாரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தும். இது போன்றதொரு கசப்பான சம்பவம் இனி மேலும் ஏற்படக்கூடாது
என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார் .
மேலும் அவர் உரையாற்றும்போது ,இப்பகுதியில் அப்பாவி முஸ்லிம்கள் மீது இனவாதிகள் மேற்கொண்ட தாக்குதலையிட்டு மன்னிப்புக் கேட்கின்றேன். வெட்கப்படுகின்றேன். பௌத்தன் என்ற வகையில் மிகவும் வேதனையடைகின்றேன்.
இச்சம்பவம் தொடர்புடைய காடையர்களை கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தி உச்ச தண்டனையும் வழங்க வேண்டும்.
நேற்று மாலை தர்கா நகர் தேசிய கல்வியியல் கல்லூரி ஐ.எல்.எம்.மஷ்ஷுர் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார் .
இனவாதிகள் என்னையும் முஹம்மத் ராஜித என்று சொல்கின்றனர். தலிபான் ஞானசார அல்கைதா ஞானசார என்று சொல்லாமல் முஹம்மத் ராஜித என்று சொல்வதையிட்டு மகிழ்ச்சியடைகின்றேன் என்றார்.
மீள்குடியேற்ற அமைச்சர் குணரத்ன வீரக்கோன், களுத்துறை மாவட்ட செயலாளர் யு.டி.சந்தன ஜயலால், பிரதேச செயலாளர் ஜானக ஸ்ரீசந்திரகுப்த, இராணுவப் படையின் மேல் மாகாண கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் உபய மெதவல, பேருவளை – அளுத்கம பகுதிக்கான பிரதிப்பொலிஸ் மா அதிபர் அமரசேன சேனாரத்ன உட்பட பொலிஸ் இராணுவ கடற்படை உயரதிகாரிகளும் அரச அதிகாரிகளும் இக்கூட்டத்தில் பங்குபற்றியுள்ளனர்
அமைச்சர் மேலும் தெரிவித்ததாவது; அளுத்கம, தர்கா நகர், பேருவளை ஆகிய பகுதிகளில் சேதமுற்ற வீடுகளை மீள் புனரமைக்க 200 மில்லியன் ரூபா நிதி செலவிடப்படுகின்றது. இராணுவத்தினரே இப்பணியை மேற்கொள்வர். அவர்களுக்கு வீட்டு உரிமையாளர்கள் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
Comments
Post a Comment