இன்று இரவு கல்முனையில் மெஸ்ரோ அமைப்பு ஏற்பாடு செய்திருந்த துஆப் பிரார்த்தனை நிகழ்வினை தடைசெய்ய கோரி பொலிஸார் நீதிமன்றில் வழக்கு தாக்கல்! நீதிமன்றம் அதனை நிராகரிப்பு, நிகழ்வினை நடாத்த அனுமதி

அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற அநீதிக்கு எதிராக முஸ்லிம் கல்வி சமூக ஆய்வக நிறுவனம் (மெஸ்ரோ) ஏற்பாடு செய்திருந்த முஸ்லிம் இருப்பும் அச்சுறுத்தும் தீவிரவாதமும் எதிர்கொள்ளும் உபாயங்களும் எனும் தலைப்பிலான கலந்துரையாடல் மற்றும் துஆப் பிரார்த்தனை நிகழ்வினை தடைசெய்யுமாறு கோரி கல்முனை பொலிஸார் இன்று கல்முனை மாவட்ட நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்தனர்.

இவ்வழக்கினை மாவட்ட நீதிமன்ற நீதிபதி விசாரணைக்கு எடுத்துக்கொண்டபோது, கல்முனை பொலிஸார் மெஸ்ரோ நிறுவனம் இன்று நடத்தவிருக்கும் இந்நிகழ்வினால் கல்முனை பிரதேசத்தின் அமைதிற்கு குந்தகம் ஏற்படும். இவ்வமைப்பு கடந்த மூன்று நாட்களாக இந்நிகழ்வினை நடாத்த முயற்சித்த போது தடைசெய்தது போல் இன்றும் இந்நிகழ்வினை தடைசெய்ய வேண்டும் என கோரினர்.

இதனை ஆட்சேபித்து மெஸ்ரோ நிறுவனத்தின் சார்பாக சட்டத்தரணிகளான எம்.முஸ்தபா, எம்.ஹாதி ஆகியோர் ஆஜராகி இன்றைய நிகழ்வு அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற சம்பவத்தில் மரணித்த உறவுகளுக்கும், அம்மக்களின் பாதுகாப்புக்கும் இறைவனின் உதவிகோரி துஆப் பிரார்த்தனையும் எதிர்காலத்தில் முஸ்லிம்கள் இவ்வாறான நிகழ்வுகளின் போது எவ்வாறு நடந்து கொள்வது பற்றி புத்திஜீவிகளைக் கொண்டு மக்களை தெளிவூட்டும் கலந்துரையாடல் நிகழ்வாகுமே தவிர இது இனமுறுகலையும், கல்முனையின் அமைதியின்மையையும் சீர்குலைக்கும் நிகழ்வல்ல. இது பொலிஸாரின் சோடணையாகும் என வாதித்திட்டனர்.

மேலும் மெஸ்ரோ நிறுவனம் முஸ்லிம் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் அநீதிகளுக்கு ஜனநாயக ரீதியில் குரல் கொடுத்துவரும் அமைப்பாகும். இதில் சட்டத்தரணிகள், விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள் என சமூகத்தை நல்வழிப்படுத்தக் கூடியவர்கள் இந்நிறுவனத்தை வழிநடத்துகின்றனர் எனவும் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இருபக்க விவாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிமன்ற நீதிபதி பொலிஸாரின் தடை உத்தரவு கோரிக்கையை நிராகரித்ததுடன் துஆப் பிரார்த்தனை நிகழ்வினை நடாத்த அனுமதி வழங்கினார். அத்துடன் அமைதிற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய பேரணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் சம்பந்தமாக மெஸ்ரோவின் ஸ்தாபகரும் பாராளுமன்ற உறுப்பினருமான சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது,

மெஸ்ரோ நிறுவனம் அளுத்கம, பேருவளையில் இடம்பெற்ற சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு துஆப் பிரார்த்தனை நிகழ்வினை நடாத்த நான்கு நாட்கள் முயற்சித்த போதும் கல்முனை பொலிஸார் நான்கு நாட்களாக இடையூறு விளைவித்தும் நீதிமன்றத்தின் மூலம் தடைஉத்தரவு பெற்றும் அவர்களின் இந்நிகழ்வினை நடத்தாமல் தடுத்து வருகின்றனர்.

அண்மையில் பொலிஸார் பொதுபல சேனாவின் கண்டி கூட்டத்திற்கு அனுமதி வழங்கியதுடன் பாதுகாப்பும் வழங்கியுள்ளனர். இதனடிப்படையில் பார்க்கும் போது பொலிஸார் ஓரவஞ்சனையுடன் நடந்து கொள்கின்றனர்.


மெஸ்ரோ நிறுவனம் புத்திஜீவிகளை கொண்டு இயங்கும் நிறுவனமாகும். இது முஸ்லிம் சமூகத்தை நல்வழிப்படுத்தும் நிகழ்வுகளை நடாத்தி வருகின்றது. அதனடிப்படையில் இன்று இடம்பெறவுள்ள துஆப் பிரார்தனை நிகழ்வினை தடைசெய்ய எடுத்த முயற்சினை நீதிமன்றம் நிராகரித்து வழங்கிய தீர்ப்பினை வரவேற்கின்றேன். அத்துடன் இன்று திட்டமிட்டபடி துஆப் பிரார்த்தனை நிகழ்வு சாய்ந்தமருது லீ மெரிடியன் மண்டபத்தில் இடம்பெறும் எனவும் தெரிவித்தார்

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்