தேர்தல் பிரசார நடவடிக்கைகள் நாளை நள்ளிரவுடன் முடிவு
சட்ட விதிமுறைகளை மீறினால் நீதிமன்றில்
வழக்கு தாக்கல்: உறுப்புரிமை இழக்க நேரிடலாம்
மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தல் பிரசார நடவடிக்கைகள் யாவும் நாளை (26)
நள்ளிரவு 12 மணியுடன் நிறைவடைகிறது.
தேர்தல் சட்ட விதிமுறைகளுக்கமைய தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், குழுக்கள் மற்றும்
வேட்பாளர்கள் தொடர்பிலான வர்த்தக விளம்பரங்கள், அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த
அறிக்கைகள், கடிதங்கள், நிகழ்வுகள் ஆகியவற்றை பிரசுரிப்பதற்கும், ஒலி, ஒளி பரப்பு
செய்வதற்குமான காலக்கெடு முடிவுக்கு வருகின்றது.
அந்த வகையில், 27ஆம் திகதி முதல் தேர்தல் நடைபெறும் 29ஆம் திகதி நண்பகல் 12
மணிவரையில் மேற்படி தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது சட்டத்துக்குப் புறம்பான
செயலாகவே கருதப்படும்.
இதற்கமைய இத்தேர்தல் சட்ட விதிகளை மீறிச்செயற்படும் வேட்பாளர்கள் தேர்தலுக்குப்
பின்னர் தமக்குக் கிடைக்க கூடிய மாகாண சபை உறுப்புரிமையை இழக்க நேரிடுமெனவும்
தேர்தல்கள் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.
இதேவேளை, சட்டவிரோத தேர்தல் பிரசாரம் மற்றும் தேர்தல் ஏற்பாடுகளை கருத்திற்கொண்டு
மேல் மற்றும் தென் மாகாண சபைகளின் பாதுகாப்பு இரட்டிப்பாக்கப்பட்டுள்ளதென பொலிஸ்
பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹன கூறினார்.
இதேவேளை, தேர்தல் பிரசாரங்கள் முடிவடைவதற்கு இன்னமும் 48 மணித்தியாலங்களேயுள்ள
நிலையில் தேர்தல் களத்தில் போட்டியிடுகின்ற அரசியல் கட்சிகளும் சுயேச்சைக்
குழுக்களும் சூடான பிரசாரப் பணிகளில் ஈடுபட்டுள்ளன. பிரதான அரசியல் கட்சிகளான
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் ஐக்கிய தேசியக் கட்சியும் சூறாவளி பிரசாரங்களை
முன்னெடுத்து வருவதனையும் காணக்கூடியதாகவுள்ளது.
அதேவேளை அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் இறுதிப் பிரசாரக்
கூட்டங்கள் 26ஆம் திகதியன்றே நடாத்தப்படவுள்ளமையினால் அவை தொடர்பிலான தகவல்களை
மாத்திரம் 27ஆம் திகதியன்று ஊடகங்கள் வாயிலாக வெளிப்படுத்துவதற்கு தேர்தல்கள்
ஆணையாளர் நாயகம் மஹிந்த தேசப்பிரிய அனுமதி வழங்கியுள்ளார்.
மேலும், 26ஆம் திகதி நடைபெற்ற கூட்டங்களின் அறிக்கைகள் தாமதித்துக்
கிடைக்கப்பெற்றமைக் காரணமாக அது குறித்த தகவல்களை 28ஆம் திகதி வெளிவரக்கூடிய
செய்திப் பத்திரிகைகளில் பிரசுரிப்பதனை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும் ஆணையாளர்
வலியுறுத்தியுள்ளார்.
முன்பின் அறிமுகம் இல்லாதவர்கள் மற்றும் விருப்பமில்லாதவர்களுக்கு ஏதோவொரு தொலைபேசி
வலையமைப்பிற்கூடாக பிரசார ஒலிப்பதிவுகள் மற்றும் குறுந்தகவல்கள் அனுப்பப்படுவது
தொலைத் தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவிற்கூடாக ஏற்கனவே கட்டுப்பாட்டிற்குள்
கொண்டுவரப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாளை (26) நள்ளிரவு 12 மணியுடன் பிரசார நடவடிக்கைகள் முடிவுக்கு வருகின்றபோதிலும்
குறித்த வேட்பாளர் 27ஆம் திகதி நள்ளிரவு 12 மணிவரையில் மாவட்ட கட்சி அலுவலகத்திலும்
தனது உத்தியோகபூர்வ வீட்டிலும் வாக்காளர் மாவட்டத்திலும் பிரசார அலுவலகத்தினை
திறந்து வைத்திருக்க முடியும்.
எனினும், 27ஆம் திகதி நள்ளிரவுக்குப் பின்னர் மாவட்ட கட்சி அலுவலகம் மற்றும்
உத்தியோகபூர்வ வீட்டில் மாத்திரமே பிரசார அலுவலகம் இருக்க முடியுமெனவும் தேர்தல்கள்
ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
இதுவரையில், நாட்டில்நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலேயே இம்முறை நடைபெறவுள்ள மேல்
மற்றும் தென் மாகாணசபைத் தேர்தல் களமே மிகவும் சுமுகமான முறையில் முன்னெடுத்துச்
செல்லப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
வாக்காளர்கள் தமக்கு கிடைக்கப்பெற்றுள்ள அனைத்து தகவல்கள் தொடர்பாக நன்கு
சிந்தித்துப்பார்த்து பொருத்தமான தீர்மானமொன்றுக்கு வருவதற்கான கால அவகாசத்தை
வழங்கும் நோக்கிலேயே தேர்தல் நடைபெறும் தினத்திற்கு 48 மணித்தியாலங்களுக்கு
முன்னதாக அனைத்து பிரசாரங்களும் முடிவுக்கு கொண்டு வரப்படுவதாகவும் தேர்தல்கள்
திணைக்களம் அறிவித்துள்ளது.
சட்ட விதிமுறைகளை மீறி பிரசார செயலில் ஈடுபடுவோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு
தாக்கல் செய்யப்படும். இதன்போது முன்வைக்கப்படும் மனுவிற்கமைய கிடைக்க கூடிய
தண்டனைகளில் ஒன்றாக குறித்த வேட்பாளர் தேர்தலுக்குப் பின்னர் தமக்கு கிடைக்க கூடிய
மாகாண சபை உறுப்புரிமையை இழக்க நேரிடுமெனவும் பிரதி தேர்தல்கள் ஆணையாளர்
விளக்கமளித்தார்.
Comments
Post a Comment