அஷ்ராப் வைத்தியசாலை அபிவிருத்திக்கு தடையாக ஏதோ ஒரு கோளாறு இருப்பதாக அறிகிறேன்!
இனம், மதம், நிறங்களுக்கப்பால் வைத்தியசாலைகளை நோக்க வேண்டும்
இவ்வாறு உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரும் தேசிய காங்கிரஸின் தேசிய தலைவருமான ஏ.எல்.எம். அதாவுல்லா குறிப்பிட்டார்.
கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சினால் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் உள்ளக வீதித்திறப்பு நேற்று மாலை(26.03.2014) நடைபெற்றது. விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்
வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டாக்டர் ஏ.எல்.எம். நசீர் தலைமையில் நடைபெற்ற இவ்வைபவத்தில் அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
வைத்தியசாலைகள் மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கான பணிகளைச் செய்து வருகின்றன.
கல்முனைப் பிராந்தியத்தில் அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை இப்பிரதேச மக்களின் ஆரோக்கிய வாழ்வுக்கு பெரும் பங்களிப்பு செய்து வருவதை நாம் காண்கின்றோம்.
வைத்தியசாலைகளை இனம், மதம், நிறம் என்ற போர்வையில் உற்றுநோக்கக் கூடாது. வைத்தியசாலை என்பது பொதுப் பணி செய்யும் இடம். இவ்விடத்தின் தேவைகளை நிறைவேற்றி வைப்பது அதிகாரம் உள்ளவர்களின் பொறுப்பாகும் என்பதைச் சுற்றுக்காட்ட விரும்புகின்றேன்.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை பல தேவைகளை வேண்டி நிற்பதை நான் அறிவேன். அத்தேவைகளை நிறைவேற்றி வைக்க என்னாலான பங்களிப்பை வழங்க எண்ணியுள்ளேன். குறிப்பாக இவ்வைத்தியசாலையின் மிக அவசரமான தேவையாகவுள்ள பாரம் தூக்கி (லிப்ட்) வசதியை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அவசரமாக மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
இருப்பினும், இவ்வைத்தியசாலைக்குக் கிடைக்கவிருக்கின்ற அபிவிருத்திகளுக்குத் தடையாக ஏதோவொரு கோளாறு இருப்பதாக நான் அறிகின்றேன். அவற்றையும் நாம் அடையாளம் கண்டு அதற்கும் பரிகாரம் காண வேண்டும்.
இவ்வைத்தியசாலையின் உள்ள வீதியினை நிர்மாணிப்பதற்கான நடவடிக்களை மேற்கொண்ட அமைச்சர் உதுமாலெப்பையை நான் பாராட்டுகின்றேன். அமைச்சர் உதுமாலெப்பை அவரது அமைச்சினூடாக பல்வேறு அபிவிருத்திப் பணிகளை எவ்வித வேறுபாடுகளுமின்றி மேற்கொண்டு வருகின்றார். உண்மையில் அவை போற்றப்பட வேண்டியவை எனவும்.அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.
இவ்வைபவத்தில் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான சட்டத்தரணி ஆரிப்சம்சுடீன், எம்.எல்.ஏ அமீர் உட்பட வைத்தியாலையின் வைத்தியர்கள். உத்தியோகத்தர்கள் அபிவிருத்திக் குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment