இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கம் இனவாதம் பேசுவதை கைவிட வேண்டும்

கல்முனை கல்விமாவட்ட தேசிய கல்வி ஜனனாயக ஆசிரியர் சங்கத்தின் கல்முனைக் கிளை கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கு எதிராக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்ட கருத்தை வன்மையாக கண்டித்து விடுக்கும் அறிக்கை.

கிழக்கில் அடக்குமுறை நிருவாகம் தமிழ் பாடசாலைகள் புறக்கணிப்பு எனும் தலைப்பில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கெதிராக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கம் பத்திரிகைகளிலும், ஊடகங்களிலும் வெளியிட்ட செய்திகளை நாம் வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சிங்களப் பேரினவாதத்தைப் பற்றி குறை சொல்லிக் கொண்டு தமிழ்ப் பேரினவாதத்தை வளர்க்கும் இச் செய்திகள், ஒற்றுமையாக வாழும் இரு சமூகங்களுக்கிடையிலும், ஒரு மொழி பேசும் அதிகாரிகளுக்கிடையிலும் விரிசலை ஏற்படுத்தி குறுகிய சுயலாபங்களைப் பெற்றுக் கொள்ளும் கீழ்த்தரமான முயற்சியாகும். கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் முஸ்லிம் சமூகத்தையும், முஸ்லிம் பாடசாலைகளையும் விட தமிழ்ப் பாடசாலைகளிலேயே அதிக அக்கறை செலுத்துகின்றார் என்பது முஸ்லிம் தரப்பிலான பெரும் குறைகூறலாகும். தமிழர் சமூகமும் ஆசிரியர்களும், அவர் மீது கொண்டுள்ள அபிப்பிராயம் இதற்குச் சான்றாகும்.
எனினும் இனவாதத்தை வைத்து அரசியல் நடாத்தும் கட்சிகளைப் போல், இனவாதத்தைக் கையில் எடுத்து சங்கம் நடாத்த முயற்சிக்கும் சில சக்திகள் கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் ஒரு முஸ்லிம் என்பதைக் காரணம் காட்டி பிழைப்பு நடாத்த முற்பட்டிருக்கின்றன. கிழக்கு மாகாணக் கல்வித் திணைக்களத்தில் திரு. நிஸாம் அவர்கள் கடமையேற்பதற்கு முன் அங்கு கடமையாற்றிய தமிழ் அதிகாரிகள் என்ன பதவிகளையும், கடமைகளையும் செய்தார்களோ அவர்கள் அனைவரும் அதே கடமைகளையே இப்போதும் செய்கின்றனர். சிலருக்கு புதிய கடமைகளும் மேலதிகமாக வழங்கப்பட்டுள்ளதை நாம் அறிவோம். எந்தவொரு தமிழ் அதிகாரியின் பொறுப்புக்களையும் அவர் பறித்தெடுக்கவில்லை என்பதையும் நாம் அறிவோம். அவ்வாறில்லையெனில் இது தொடர்பாக பகிரங்கமாக பதவியைக் குறிப்பிட்டு நிருபிக்க வேண்டும்.
இடமாற்ற சபை கூடித் தீர்மானித்த இடமாற்றங்களை மாகாணக் கல்விப் பணிப்பாளர் இடைநிறுத்தி அடக்கு முறை பிரயோகித்துள்ளார் எனும் குற்றச்சாட்டையும் நாம் மறுக்கின்றோம். இடமாற்றங்களுக்குப் பொறுப்பாகவும் ஒரு தமிழ் அதிகாரியே நியமிக்கப்பட்டிருந்தார். இடமாற்ற சபைத் தீர்மானத்திற்கு முரணாக அந்த அதிகாரி தமக்கு விரும்பியவர்களுக்கெல்லாம் இடமாற்றம் வழங்கிய உண்மை கண்டு பிடிக்கப்பட்டு இடமாற்றங்கள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டு மீண்டும் இடமாற்ற சபை கூடியதை தமிழர் ஆசிரியர் சங்கமும் அறியும். மேலும், இடமாற்றங்கள் அனைத்தையும் மார்ச்சு 31 வரை கௌரவ ஆளுனர் இடைநிறுத்தியதையும் தமிழர் ஆசிரியர் சங்கம் அறியும். அவரோடு இது தொடர்பில் பேசிய நாமும் அறிவோம். அவ்வாறிருக்க முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போன்று இனவாதச் செய்தி வெளியிட்டிருப்பது மனச்சாட்சிக்கு விரோதமான செயலாகும்.
மாகாணக் கல்விப் பணிப்பாளர் அவர் வகித்த அனைத்துப் பதவிகளின் போதும் சரியான தகவல்களைத் திரட்டி அதிலிருந்து திட்டமிடலை மேற்கொள்வது அவரது இயல்பு. இதுவரை அவர் செய்த அனைத்து தகவல் ஆய்வுகளினாலும் பாடசாலைகள் விழிப்புணர்வு பெற்று செயற்படுவதை நாம் அறிவோம்.
இப்போது வழங்கப்பட்டுள்ள படிவம் ஒரு ஆசிரியரின் சேவை விபரங்களைப் பற்றிய தகவல்களையே கோருகின்றது. கேட்கப்பட்டுள்ள தகவல்கள் புதிய வகையிலானதும் அல்ல. பல்வேறு விடயங்களில் இவ்வாறான தகவல்கள் கோரப்படுவது இயல்பே. இது தொடர்பில் நாம் கேட்டபோது ஒரு தகவல் தளம் அமைத்து ஆசிரியர்களின் பணியை இலகுபடுத்துவதே தமது நோக்கமென்றும் இதனால் எதிர்காலத்தில் ஆசிரியர்கள் பல்வேறு அனுகூலங்களை அடைவதை நீங்கள் கண்கூடாகக் காண்பீர்கள் எனவும் எம்மிடம் தெரிவித்தார். இந்நவீன உலகில் ஒரு தகவல் தளம் அமைப்பது என்பது அவசியமானதும் சாதாரணமானதுமான ஒரு விடயமாகும். ஒரு திணைக்களம் தமது பணியாளர்களைப் பற்றிய தகவல் தளம் ஒன்றைக் கொண்டிருக்கவில்லையென்றால் அது குறைசொல்லத்தக்க ஒரு விடயம் ஆகும்.
இந்த தகவல் திரட்டும் படிவத்துக்கும் இனவாதத்துக்கும் முடிச்சுப் போடும் மர்மம் என்ன? இப்படிவம் தமிழ், முஸ்லிம், சிங்கள ஆசிரியர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது. தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருந்தால்; மறைமுகத் திட்டம் என வர்ணிக்கலாம். இப்படிவத்தால் ஏனைய இன ஆசிரியர்களை விட தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் என்ன பாதிப்பு என்பதை தமிழர் ஆசிரியர் சங்கம் விளக்குமானால் அவர்களுக்கு தலைவணங்கத் தயாராக இருக்கின்றோம்.
இப்படிவம் தமிழ் அதிபர், ஆசிரியர்களை ஓரங்கட்டி தமிழ் மாணவர்களின் கல்வியை அழிக்கும் திட்டமென தமிழர் ஆசிரியர் சங்கம் குறிப்பிட்டிருப்பது சாதாரண அறிவுள்ள மக்களாலும் நகைப்புக்கிடமாக நோக்கக் கூடியதொரு கூற்றாகும்.
இப்படிவத்தில் குறைபாடுகள் இருந்தால் அதனை வெளிப்படையாகச் சுட்டிக்காட்டி இருக்கலாம். அதை விடுத்து படிவத்துக்கு இனச்சாயல் பூசி அப்பாவித் தமிழ் மக்களை மாகாணக் கல்விப் பணிப்பாளருக்கெதிராக திசைதிருப்ப முயற்சிப்பதும் தமிழ் ஆசிரியர்களின் ஆதரவை இனவாதம் பேசி கபடத்தனமாகப் பெற முயற்சிப்பதும் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் கடந்த கால வரலாற்றுத் தகைமைகளுக்கு சேறுபூசும் செயலாகும்.
சமாதான சபைகளில் அங்கத்துவம் வகித்துக் கொண்டு இனவாதம் பேசுவதை நிறுத்துமாறு தமிழர் ஆசிரியர் சங்கத்தின் தலைவரை விசேடமாகக் கேட்டுக் கொள்கின்றோம். இனவாதம் பேசிப் பேசி இறுதியாக இருக்கும் நண்பனையும் இழந்து விடாதீர்கள்.
எம்.எச்.எம்.மொகிடீன்
செயலாளர்,
கல்முனைக் கல்வி மாவட்ட
தேசிய கல்வி ஜனனாயக ஆசிரியர் முன்னணி,
கல்முனைக் கிளை.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்