கல்முனை அஷ்ரப் வைத்திய சாலைக்கு உள்ளே தடைகள் ஏதும் இல்லை
வைத்திய அத்தியட்சகர் நஸீர்
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வைத்தியசாலை
நிருவாகமோ அபிவிருத்திக் குழுவோ ஒருபோதும் தடையாக இருந்ததில்லை என அஷ்ரப்
ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் ஏ.எல்.எம். நசீர்
தெரிவித்தார்.
நேற்று மாலை வைத்தியசாலையின் சிறுவர் பராமரிப்புக் கட்டடத் தொகுதியில்
இடம்பெற்ற வைத்தியசாலையின் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக
தெளிவுபடுத்தும் வைத்தியசாலைக் குழுக் கூட்டத்திற்கு தலைமை வகித்து
உரையாற்றும்போதே வைத்திய அத்தியட்சகர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்;
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் அபிவிருத்திக்கு வைத்திய
அத்தியட்கராகிய நானும் அபிவிருத்திக் குழுவும் தடையாக இருப்பதாக இணையத்
தளங்களிலும் தினசரிப் பத்திரிகையிலும் செய்திகள் வெளிவந்துள்ளன.
இச்செய்தியில் எவ்வித உண்மைத்தன்மையும் இல்லை. ஒருவர் தொடர்பாகவோ அல்லது
ஒரு நிறுவனம் தொடர்பாகவோ குற்றச்சாற்றுகள் முன்வைக்கப்படுமாயின் அது
தொடர்பான சரியான தகவல்கள் மற்றும் கருத்துக்கள் உரிய தரப்பிடமிருந்து
பெறப்பட்ட பின்பே அது தொடர்பான செய்திகளை ஊடகவியலாள்கள் ஊடங்களில்
பிரசுரிக்க வேண்டும். அதுவே ஊடகத் தர்மமாகும்.
ஊடகவியலாளர்கள் ஊடகத் தர்மத்தைக் காப்பாற்றுபவர்களாக செயற்பட
வேண்டுமென்பதே எங்களது விருப்பமாகும். எந்தவொரு ஊடகவியலாளருக்கு எதிராகவோ
அல்லது எந்தவொரு ஊடகத்திற்கு எதிராகவோ அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலை
நிர்வாகமும் அபிவிருத்திக் குழுவும் செயற்படவில்லை.
உண்மைக்குப் புறம்பான ஒரு தரப்பு தகவல்களை மாத்திரம் வைத்துக் கொண்டு
செய்திகளைப் பிரசுரிக்காமல் செய்தி தொடர்பில் வழங்கப்பட்ட தகவல்களின்
உண்மைத்தன்மையை உறுதிப்படுத்திய பிற்பாடு செய்திகளைப் பிரசுரிப்பதும்
செய்திகளை வழங்குவதும் ஊடகத்தினதும் ஊடகவியலாளர்களிதும் தார்மீகப்
பொறுப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புவதுடன் அஷ்ரப் ஞாபகார்த்த
வைத்தியசாலையின் நிருவாகமும் நானும் என்றும் ஊடகவிலாளர்களுடன் நட்புறவுடன்
செயற்படவே விரும்புகிறேன்.
அத்துடன், தனிப்பட்ட விருப்பு வெறுப்புக்களுக்காக இவ்வைத்தியசாலையின்
அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கு தடையாக இருக்க வேண்டாம் என்றும்
இவ்வைத்தியசாலையின் தேவைகளை அறிந்து எவர் அவற்றை நிறைவேற்ற
முன்வருகிறார்களோ அவர்களுக்கு பூரண ஒத்துழைப்பு வழங்க இவ்வைத்தியசாலையின்
நிருவாகம் என்றும் தயாரகவே உள்ளது.
இவ்வைத்தியசாலை ஒருவருக்கோ அல்லது ஒரு குழுவினருக்கோ சொந்தமானதல்ல.
மாறாக இது இப்பிராந்திய மக்களுக்கான அரச நிறுவனம். இதனை அபிவிருத்தி
செய்யவோ அல்லது இவ்வைத்தியசாலைக்கு உதவி புரியவோ எவருக்கும் முடியும்.
அதனால் பயனடையப் போவது இப்பிராந்தியமும் இப்பிராந்திய மக்களுமே.
இன்றும் இவ்வைத்தியசாலையில் பல அபிவிருத்தி திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றன. இன்னும் பல அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
அவற்றுக்கான முன்னெடுப்புக்கள் நடைபெற்று வருகிறது. இவ்வைத்தியசாலையின்
அபிவிருத்திப் பணிகளுக்கு தடையாக யாரும் இருக்க வேண்டாம்” என்று
குறிப்பிட்டார்.
இதேவேளை, இவ்வைத்தியசாலையில் நெதர்லாந்து அரச நிதியுடன் இரண்டு மாடிகளைக் கொண்ட இரத்த வங்கி கட்டடம் நிறுவப்படவுள்ளது.
வைத்தியசாலையின் உள்ளக வீதி கட்டமைப்பு அபிவிருத்திப் பணிகள்
முடிவடைந்திருப்பதுடன், விடுதி பகுதிகளினூடனான உள்ளக வீதி அபிவிருத்தி
நடவடிக்கைகள் சுமார் 40 லட்சம் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ளது.
அது தவிர, வைத்தியசாலையின் அவசர விபத்துச் சிகிச்கைப் பிரிவிற்கான புதிய
வேலைத் திட்டமொன்று உலக வங்கியின் சுமார் ரூபா 100 மில்லியன் நிதி
ஒதுக்கீட்டுடன் வெளிநோயாளர் பிரிவுக்கான கட்டடத் தொகுதியின் விரிவாக்கலுடான
அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
அவற்றுடன், வைத்தியசாலையின் எதிர்கால இடத் தேவையை நிறைவு செய்யுமுகமாக
வைத்தியசாலைக்காக இறைவெளிக் கண்டத்தில் கல்முனை பிரதேச செயலகத்தினால்
வழங்கப்பட்டுள்ள 3 ஏக்கர் காணி மண்போட்டு நிரப்பும் பணிகள்
மேற்கொள்ளப்படுவதுடன், கதிரியக்கப் பிரிவுக்கான கட்டடத் தொகுதி
நிர்மாணிக்கப்படுவதும் நோயாளர் விடுதிகளுக்கான பாரம் தூக்கி அமைக்கப்பட
வேண்டியதும் இவ்வைத்தியசாலையின் தற்போதைய அவசியத் தேவயாகவுள்ளமை
சுட்டிக்காட்டத்தக்கது.
Comments
Post a Comment