கல்முனை மாநகர சபை சர்ச்சை: அமைச்சர் ஹக்கீம் தலைமையில் விசேட கூட்டம்
சபை அமர்விலும் ஹக்கீம் பங்கேற்பார்
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்டுப்பாட்டிலுள்ள கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான விசேட கூட்டமொன்று இன்று திங்கட்கிழமை இடம்பெறவுள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
நீதி அமைச்சரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் ரவூப் ஹக்கீம் தலைமையில் அக்கட்சியின் பொதுச் செயலாளர் ஹசன் அலியின் நிந்தவூர் இல்லத்தில் இடம்பெறவுள்ளது.
கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கு இடையிலான சர்ச்சை கடந்த பல மாதங்களாக இடம்பெற்று வருகின்றது. இந்த நிலையிலேயே சட்டத்தரணி நிசாம் காரியப்பர் பதில் கல்முனை மேயராக கடந்த நவம்பர் மாதம் நியமிக்கப்பட்டார்.
இதனையடுத்து சட்டத்தரணி நிசாம் காரியப்பரினால் கல்முனை மாநகர சபைக்கான 2014ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டம் கடந்த திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவிருந்தது.
எனினும் இந்த வரவு-செலவுத் திட்டத்தை தோற்கடிப்பதற்கான முயற்சிகளில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் சில மாநகர சபை உறுப்பினர்கள் ஈடுபட்டனர். இதனால் கல்முனை மாநகர சபையின் மாதாந்த கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்த நிலையிலேயே தலைவர் ரவூப் ஹக்கீம் தலைமையில் இடம்பெறவுள்ளது. தனிப்பட்ட விஜயமொன்றை மேற்கொண்டு மலேசியா சென்றிருந்த அமைச்சர் ஹக்கீம் நேற்று ஞாயிற்றுக்கிழமை நாடு திரும்பியிருந்தார்.
இதனை தொடர்ந்து உடனடியாக கல்முனைக்கு செல்லவுள்ள அமைச்சர் ஹக்கீம், இந்த கூட்டத்தில் கலந்துகொண்டு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர்களிடையே உள்ள இழுபறியினை நீக்கும் முயற்சியில் ஈடுபடவுள்ளார்.
இந்த நிலையில் கல்முனை மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர்களை நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் சந்தித்து பேச்சு நடத்தியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கருத்து தெரிவிக்கையில்
"கல்முனை மாநகர சபையின் 2014ம் ஆண்டுக்கான வரவு-செலவு திட்டத்தினை எதிர்வரும் 31ம் திகதி வெற்றிபெற சகல முயற்சிகளையும் எடுத்து வருகின்றேன் கடந்த வாரம் கல்முனை மாநகர சபையின் 2014ஆம் ஆண்டு வரவு-செலவு திட்டம் தொடர்பாக முஸ்லிம் காங்கிரஸ் கட்சி உறுப்பினர்களுக்கிடையில் முரண்பாடு ஏற்பட்டது.
இந்த முரண்பாடுகளுடன் தொடர்புடைய நான்கு உறுப்பினர்களில் மூன்று உறுப்பினர்களின் முரண்பாடுகளுக்கான காரணங்களை கேட்டறிந்து கொண்டேன். புதிய மேயர் பதவியேற்றபோது மாநகர நிருவாகத்தினரால் அவர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகள் சம்பந்தமாக குறித்த மூன்று உறுப்பினர்களும் எடுத்துக் கூறினார்கள்.
குறித்த உறுப்பினர்களுக்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் சம்பந்தமாக கட்சிக்குள் இருந்து கொண்டு தீர்த்துக் வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பதாக உறுதியளித்துள்ளேன். முன்னாள் மேயர் சிராஸ் மீராசிப் கொழும்பில் உள்ளமையினால் அவருடன் மாநகர சபை முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்களின் ஒற்றுமை தொடர்பாக தொலைபேசி ஊடாக தெளிவாக கூறியுள்ளேன்" என்றார்.
Comments
Post a Comment