காரைதீவு பிரதேச சபையின் பட்ஜட் மீண்டும் தோற்கடிப்பு
தவிசாளரின் தன்னிச்சை போக்கை எதிர்த்தே வாக்களித்ததாக உறுப்பினர்கள் தெரிவிப்பு
காரைதீவு பிரதேச சபையின் வரவு, செலவுத் திட்டம் மீண்டும் தோற்கடிக்கப்பட்டுள்ளது.
ஐந்து உறுப்பினர்களைக் கொண்ட இந்தப் பிரதேச சபை,
தமிழ்த் தேசி யக் கூட்டமைப் பின் ஆளுகைக் குட்பட்டது. இந்த சபையில் அங்கம் வகிக்கும் 5 உறுப்பினர்களில் நால்வர் எதிர்த்து வாக்களித்துள்ளனர்.
காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் கடந்த 18 ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது தோற்கடிக்கப்பட்டிருந்தது. அதனையடுத்து இரண்டாவது தடவை யாகவும் நேற்று சபையில் சமர்ப்பிக்கப் பட்டபோது ஐந்து உறுப்பினர்களில் நான்கு பேர் எதிர்த்து வாக்களித்தனர். அதாவது, சபையின் தவிசாளரைத் தவிர சகல உறுப்பினர்களும் எதிர்த்து வாக்களித்தனர்.
தவிசாளரின் தன்னிச்சையான போக்குக்கு எதிராகவே தாங்கள் எதிர்த்து வாக்களித் துள்ளதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பின் கட்டுப்பாட்டிலுள்ள காரைதீவு பிரதேச சபையின் வரவு செலவுத் திட்டம் சமர்ப்பிப்பதற்கான அமர்வு நேற்று தவிசாளர் செ. இராசையா தலைமையில் பிரதேச சபை மண்டபத்தில் நடைபெற்றது.
அங்கு தவிசாளரினால் சமர்ப்பிக்கப்பட்ட 2வது வரவு செலவுத் திட்டத்தை ஆளும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த உப தவிசாளர் கே. தட்சணாமூர்த்தி, உறுப்பினர்களான சு. பாஸ்கரன், வை. கோபிகாந், ஸ்ரீல. மு. கா. உறுப்பினர் எம். ஏ. பாயிஸ் ஆகியோர் எதிர்த்து வாக்களித்து பேசினர்.
இறுதியில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டபோது 4-1 என்ற வாக்கு வித்தியாசத்தில் வரவு செலவுத் திட்டம் தோற்கடிக்கப்பட்டது. காரைதீவு பிரதேச சபை வரலாற்றில் வரவு செலவுத் திட்டமொன்று இரு தடவைகளும் தோற்கடிக்கப்பட்டமை இதுவே முதற்தடவையாகும். அதுமட்டுமல்ல கடந்த மூன்று வருட காலத்தில் ஊடகவியலாளர்களுக்கோ, பார்வையாளர்களுக்கோ அழைப்பு விடுக்கப்படவில்லை. ஆனால் இக்கூட்டத்திற்கு தவிசாளரினால் அவரது ஆதரவாளர்கள் சிலருக்கு அழைப்பு அனுப்பப்பட்டிருந்தது.
அமர்வு நிறைவுற்றதும் சபாமண்டபத்தில் வைத்து அச்சு இலத்திரனியல் ஊடகங்களுக்கு கருத்துகள் தெரிவிக்கப் பட்டன.
அங்கு உபதவிசாளர் தட்சணாமூர்த்தி கருத்துரைக்கையில்,
நாம் கடந்த 18ம் திகதி சமர்ப்பிக்கப்பட்ட 1வது வரவு செலவுத் திட்டத்தையும் நிராகரித்தோம். நேற்று சமர்ப்பித்த 2வது வரவு செலவுத் திட்டத்தையும் நிராகரித்தோம். இதனூடாக எமது தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எந்த இழப்புமில்லை. நாம் கூட்டமைப்பில் தான் இருக்கிறோம்.
ஆனால் கூட்டமைப்பிலிருந்துகொண்டு பிழையான நடவடிக்கை மேற்கொள்ளும் தலைமைத்துவத்தை மாற்றியுள்ளோம் என்பதை தெளிவாகக் கூறியுள்ளோம். எமது கட்சியினால் எமது தவிசாளர் தோற்கடிக்கப்பட்டாரே தவிர ஏனைய கட்சியினால் தோற்கடிக்கவில்லை. ஒரு மாற்றத்தை கொண்டுவருவதற்காக மக்களுக்கு சிறந்த வெளிப்படைத் தன்மையான சேவையை வழங்கவே நாம் இதனைச் செய்துள்ளோம். 2014ம் ஆண்டுக்கான இரண்டு பட்ஜெட்டுகள் தோற்கடிக்கப்பட்டுள்ளன. எனவே தவிசாளர் பதவியிறக்கப்பட்டுள்ளார். அதைவிட, பார்வையாளர்கள் அதுவும் அவரது ஆதரவாளர்கள் மட்டுமே கலந்துகொண்டிருப்பது அதிகமாகவுள்ளது என்றார்.
கோபிகாந்
த. தே. கூ. உறுப்பினர் வை. கோபிகாந் கூறுகையில்,
மக்களின் தேவை கருதியே இப்பட்ஜட்டை தோற்கடித்துள்ளோம். எம்முடன் சற்றும் கலந்தாலோசியாமல் தவிசாளர் தன்னிச்சையாக பட்ஜெட்டைத் தயாரித்துள்ளார். அதனை முற்றாக கண்டிக்கிறோம். இதனால் நாம் த. தே. கூட்டமைப்பிற்கு எதிரானவர்களல்ல. கட்சி எடுக்கும் எவ்வித செயற்பாடுகளுக்கும் தலைசாய்ப்போம். நாவிதன்வெளி பிரதேச சபை பட்ஜெட் தோற்கடிக்கப் பட்டமைக்கு காரணமும் இதே தவிசாளரின் சதிவேலையே என்றார்.
மற்றுமொரு த. தே. கூட்டமைப்பு உறுப்பினர் சு. பாஸ்கரன் கருத்துரைக்கையில்:-
நாம் நிதிக் குழுவில் இருக்கிறோம். எம்மிடம் ஒரு வார்த்தை கேட்கவில்லை. பாதீடு தயாரிக்கப்படும்போது உறுப்பினர்கள் என்ற வகையில் எமது கருத்துக்களும் ஆலோசனைகளும் கேட்கப்படவேண்டும். ஆனால் அப்படி கேட்கவில்லை. நாம் எமது த. தே. கூட்டமைப்பிற்கு துரோகம் இழைக்கமாட்டோம். நாம் ஒரு சர்வாதிகாரியை அகற்றியுள்ளோம் என்பதே உண்மை என்றார்.
மு. கா. உறுப்பினர் பாயிஸ்
ஸ்ரீல. மு. கா. உறுப்பினர் எம். ஏ. பாயிஸ் கருத்துரைக்கையில்,
இன்று 2வது முறையாகவும் பட்ஜெட் சமர்ப்பிக்கப்பட்டு 1-4 என்ற விகிதத்தில் தோற்றகடிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று கடந்த 18ம் திகதியும் 1வது பட்ஜெட் கொண்டுவரப்பட்டு 1-4 என்ற விகிதத்தில் தோற்கடிக்கப்பட்டது. ஆனால், ஊடகங்களில் வேறுபட்ட செய்தி வந்தமை கவலைக்குரியது. செயலாளரின் நடவடிக்கையையும் கண்டிக்கிறோம். அவர் 1வது பட்ஜட் தோற்கடிக்கப்பட்டமை பற்றி உதவி உள்ளூராட்சி ஆணையருக்கு இன்னும் அறிவிக்கவில்லை. இது கண்டனத்துக்குரியது. எனவே உள்ளூராட்சி அமைச்சு ஊடாக செயலாளருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளோம். எனவே 2வது பட்ஜெட்டும் முற்றாக தோற்கடிக்கப்பட்டுள்ளது என்பதை ஆணித்தரமாக கூறிக்கொள்ளவிரும்புகிறேன் என்றார்.
Comments
Post a Comment