நிந்தவூரில் பதற்றம்: ரயர் எரிப்பு ஹர்த்தால் அனுஸ்டிப்பு

நிந்தவூர் கடற்கரை பகுதியில் பொதுமக்களுக்கும் விசேட அதிரடிப்படையினருக்கும் இடையில் முறுகல் நிலையொன்று ஏற்பட்டதையடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது.  அத்துடன், பிரதேசத்தில் ஹர்த்தால் அனுஷ்டிக்கப்படுவதாக எமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
நிந்தவூர் பகுதியில் இரவு வேளைகளில் தொடர்ச்சியாக இடம்பெறுகின்ற கொள்ளை சம்பவங்களை கட்டுப்படுத்தல் மற்றும் கொள்ளையர்களை கண்டுபிடித்தல் தொடர்பில் விசேட விழிப்பு குழுவொன்று அமைக்கப்பட்டு ஆராயப்பட்டது.
இதன் பிரகாரம் இரவு 9 மணிக்கு பின்னர் வீடுகளிலிருந்து வெளியே செல்கின்றவர்கள் தங்களுடைய ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்தும் ஆவணங்களை எடுத்துசெல்லவேண்டும் என்று அந்த குழு தீர்மானித்து. அந்த தீர்மானத்தை பள்ளிவாயில்களின் ஊடாக பொதுமக்களுக்கு அறிவித்தது.

இந்நிலையில், விசேட அதிரடிப்படையினர் அணியும் ஆடைகளை ஒத்த ஆடைகளை அணிந்து நிந்தவூர் கடற்கரை பகுதிக்கு வந்த நான்கு அல்லது ஐந்து பேர் அடங்கிய குழுவினர் கடற்கரையில் வைத்து ஆடைகளை மாற்றிக்கொண்டு நேற்றிரவு ஊருக்குள் வருவதை கண்ட பொதுமக்கள் அவர்களை சுற்றிவளைத்து ஆள் அடையாளத்தை உறுதி படுத்துமாறு கேட்டுள்ளனர்.
ஆள் அடையாளத்தை உறுதிப்படுத்த தவறிய அவர்கள், தங்களை சுற்றிவளைத்த மக்களை தாக்கிவிட்டு தப்பியோடுவதற்கு முயன்றுள்ளனர். சம்பவத்தை கேள்வியுற்று அரசியல்வாதிகளும் அவ்விடத்திற்கு விரைந்துள்ளனர்.
இந்நிலையில், அவ்விடத்திற்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர் பொதுமக்களால் சுற்றிவளைக்கப்பட்ட அந்த குழுவினரை மீட்டுக்கொண்டு போவதற்கே முயன்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு பொதுமக்கள் இடம்கொடுக்காமையை அடுத்து. விசேட அதிரடிப்படையினர் வானத்தையும் பூமியையும் நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
பூமியில் பட்ட  துப்பாக்கி சன்னங்கள் தெறித்ததில்   பொதுமக்களில்   இரண்டொருவருக்கு சிறுகாயங்களும் ஏற்பட்டுள்ளன. நிந்தவூர் பிரதேச சபை தவிசாளர் ஏ.எம்.தாஹிர் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருகின்றார். இதனையடுத்தே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது.
எம்மால் சுற்றிவளைக்கப்பட்டவர்களுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளதுடன் விசேட அதிரடிப்படையினரின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் வீதிகளில் ரயர்களை போட்டு எரித்து எதிர்ப்பு நடவடிக்கைகளில் இன்று (18) ஈடுபட்டுள்ளமையால் வழமையான நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன. வியாபார நிலையங்கள், பாடசாலைகள், வங்கிகள், அரச காரியாலயங்கள் முற்றாக மூடிப்பட்டுள்ளன.
இதேவேளை, ரோந்து சேவையில் ஈடுபட்ட சீருடையணிந்த மற்றும் சிவில் உடையில் இருந்த விசேட அதிரடிப்படையினர் மீது இனந்தெரியாதவர்கள் தாக்குதல் நடத்தியதாகவும் சம்பவத்தில் விசேட அதிரடிப்படையினர் இருவர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, சம்பாந்துறை பொலிஸார் இருவர் பொது மக்களின் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மக்கள் ஆர்ப்பாட்டம் காரணமாக கல்முனை – அக்கரைப்பற்று பிரதான வீதி மூடப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.





Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

மர்ஹூம் எம்.எச்.அஸ்ரபின் பத்தாவது ஆண்டு நினைவு தினம் இன்று