சிறுவர்கள் தற்கொலைக்கு முயலும் வீதம் அதிகரிப்பு
![]() |
Dr. சித்ரா கலமநாதன் |
மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்யும் வீதம் அதிகரித்து காணப்படுவதாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை சிறுவர் உளநல வைத்திய நிபுணர் டாக்டர் சித்ரா கலமநாதன் தெரிவித்துள்ளார்.
தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையினால் கர்ப்பிணித் தாய்மார்களுக்கான உளவியல் செயலமர்வு இன்று செவ்வாய்க்கிழமை ஆரையம்பதி பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் இடம்பெற்ற போது அதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கையில்,
மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்கொலை முக்கிய இடம் வகிக்கின்றது. குறிப்பாக 12வயது சிறுவர்களுக்கு மத்தியில் தற்கொலை அதிகரித்துக் காணப்படுகின்றது.
பிள்ளைகளை பெற்று வளர்க்கும் தாய்மார்களாகிய நீங்கள் உங்களது குழந்தைகளை நல்ல முறையில் சமூகத்தில் உளநலமுள்ள சிறுவனாக வளர்க்க வேண்டும்.
நீங்கள் அது தொடர்பில் எந்நேரமும் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். பிள்ளைகள் நல்ல குணமுள்ள பிள்ளைகளாக உருவாவதற்கான முழுமையான பொறுப்பு பெற்றோர்களிடமே உள்ளது.
இன்று சிறுவர்கள் பாலியல் உள்ளிட்ட பல்வேறு துஷ்பிரயோகங்களுக்கு உட்படுத்தப்படுகிறார்கள். 17வயதில் சிறுமிகள் கர்ப்பம் தரித்தவர்களாக மாறுகின்றார்கள்.
எது எவ்வாறிருந்தாலும் சிறுவர்கள் என்போர் 18வயது வரை உள்ள சகல உயிர்களும் சிறுவர்களாகவே கணக்கிடப்படுகிறார்கள்.
தாய்மார்களாகிய நீங்கள் சிறுவர்களின் உரிமைகளை அறிந்து நல்ல சிறுவர்களாக உருவாக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Comments
Post a Comment