மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் நியமனம்!
பாராளுமன்ற உறுப்பினரும், பாராளுமன்ற பேரவை உறுப்பினருமான அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சின் மேற்பார்வை எம்பியாக, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.

மக்கள் தொடர்பாடல் மற்றும் தகவல் அமைச்சர் கலாநிதி கெஹெலிய ரம்புக்வெல்லை முன்னிலையில் இவர் இன்று முற்பகல் அமைச்சில் வைத்து தமது கடமைகளையும் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தமது அமைச்சின் மேற்பார்வை எம்பியாக ஏ.எச்.எம்.அஸ்வர் ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்டமை குறித்து தாம் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும் ஊடகத்துறையில் மிகவும் அனுபவம் வாய்ந்த ஒருவரை தமது அமைச்சுக்கு நியமித்தமை குறித்து தாம் இரட்டிப்பு மகிழ்ச்சியடைவதாகவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார்.
அமைச்சின் செயலாளர் சரித்த ஹேரத், நவமணி பத்திரிகையின் பிரதம ஆசிரியர் அல்ஹாஜ் என் எம் அமீன்,தகவல் திணைக்கள பிரதிப் பணிப்பாளர் ஹில்மி மொஹமட், அஸ்வர் எம்பியின் இணைப்புச் செயலாளர் முபாரக் அலி, தகவல் அதிகாரி நூருல் அயின் நஜ்முல் ஹுசைன் ஆகியோர் உட்பட பிரமுகர்கள்,ஊடகவியலாளர்கள் பலரும் இந்நிகழ்வில் கலந்துக் கொண்டனர்.
1960ஆம் ஆண்டில் சிரேஷ்ட ஊடகவியலாளராக லேக் ஹவுஸில் இணைந்துக் கொண்ட அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், தினபதி, சிந்தாமணி பத்திரிகை நிறுவனத்திலும் பத்திரிகையாளராக கடமை புரிந்துள்ளார்.பல்வேறு பத்திரிகைகளின் ஆசிரியராகவும் கடமை புரிந்த இவர், 1989ஆம் ஆண்டில் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டார்.
அல்ஹாஜ் ஏ.எச்.எம்.அஸ்வர், .முன்னாள் முஸ்லிம் சமய கலாசார அலுவல்கள் ராஜாங்க அமைச்சராகவும் ,பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சராகவும் திகழ்ந்துள்ளார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் ஒலிபரப்பாளராகவும், கலைஞராகவும் இவர் திகழ்ந்துள்ளார்.சிங்களம், தமிழ், ஆங்கிலம் ஆகிய மும்மொழிகளிலும் பாண்டித்தியம் பெற்றுள்ள இவர் தமிழ் மொழி மூல சிறந்த கிரிக்கெட் வர்ணனையாளருமாவார்.
Comments
Post a Comment