பெட்மின்டன் பயிற்சிக்காக மலேஷியா சென்ற கல்முனை ஸாஹிரா மாணவர்கள் பாராட்டி கெளரவிப்பு
கிழக்கு மாகாணத்திலிருந்து முதன் முதலாக வெளிநாடு ஒன்றுக்கு பாடசாலை மாணவர் குழுவொன்று பெட்மின்டன் பயிற்சிக்காகவும் போட்டிக்காகவும் சென்றமையை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வொன்று கடந்த வெள்ளிக்கிழமை கல்லூரி காரியப்பர் மண்டபத்தில் இடம்பெற்றது.
கல்லூரி அதிபர் ஏ. ஆதம்பாவா தலைமையில் இடம்பெற்ற மேற்படி நிகழ்வில் இலங்கை பெட்மின்டன் சம்மேளனத்தின் முன்னாள் தலைவரும் உலக பெட்மின்டன் சம்மேளனத்தின் நிறைவேற்று பணிப்பாளருமான பேராசிரியர் ரஞ்சித் டி சில்வா பிரதம அதிதியாகவும் கல்முனை வலய கல்விப் பணிப்பாளர் யூ. எல். எம். ஹாஸிம் கெளரவ அதிதியாகவும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சம்மேளனத் தலைவர் எம். எச். எம். மன்சூர், கல்முனை வலய கணக்காளர் ரீ. சாலித்தீன், கல்முனை வலய உடற் கல்வித்துறை உதவிக் கல்விப் பணிப்பாளர் ஏ. ஏ. சத்தார், கல்முனை எஸ். எம். அன்வர் எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவ பணிப்பாளர் எஸ். எம். அன்வர் ஆகியோர் விசேட அதிதிகளாகவும் கலந்துகொண்டனர்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 11 மாணவர்கள், பொறுப்பாசிரியர் அலியார் ஏ. பைஸர் தலைமையில் கடந்த மாதம் மலேசியா கோலாலம்பூர் லூயி பெட்மின்டன் அகடமியில் இடம்பெற்ற பெட்மின்டன் பயிற்சி மற்றும் போட்டி நிகழ்வுகளுக்கு கல்வியமைச்சின் அனுமதியுடன் இலங்கை பெட்மின்டன் சம்மேளனம் மற்றும் கிழக்கு மாகாண பெட்மின்டன் சம்மேளனம் ஆகியவற்றின் பூரண அனுசரணையில் சென்றிருந்தனர்.
கல்முனை ஸாஹிரா தேசியக் கல்லூரியின் 63 வருட காலத்தில் இக்கல்லூரியிலிருந்து சர்வதேச ரீதியில் பாடசாலை மாணவர் குழுவொன்று பயிற்சிக்காகவும் போட்டிக்காகவும் சென்று இக்கல்லூரிக்கும் கல்முனை பிரதேசத்திற்கும் கிழக்கு மாகாணத்திற்கும் பெருமை தேடித்தந்தமைக்காகவே இந்த பாராட்டு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
Comments
Post a Comment