மீண்டும் உருவெடுக்கிறது சாய்ந்தமருது தனியான பிரதேச சபை கோரிக்கை; ஹக்கீமுக்கு பகிரங்க மடல்!

கிழக்கு மாகாண கரையோரப் பிரதேசத்தின் அம்பாறை மாவட்டத்திலே அமைந்துள்ள சாய்ந்தமருது கிழக்கே கடலையும் மேற்கே வயல்வெளியையும் கொண்ட ஒரு வனப்பு மிக்க பிரதேசமாகும்.
17 கிராம சேவகர் பிரிவுகளிலும் ஏறக்குறைய 7000 குடும்பங்களையும் மொத்தமாக 17000ற்கு மேற்பட்ட வாக்காளர்களையும் உள்ளடக்கியுள்ளது.
தனியான பிரதேச செயலகம,; 09 பாடசாலைகள், மாவட்ட வைத்தியசாலை, சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம், தபால் நிலையம், 3 உப தபால் நிலையங்கள், நூற்றுக்கணக்கான வர்த்தக நிலையங்கள், முக்கியமான வங்கிகள் என்பனவற்றைக் கொண்டிருப்பதோடு பல அரச அலுவலகங்களும் காணப்படுகின்றன.
2004 ஆம் ஆண்டு சுனாமியினால் பாதிக்கப்பட்டு இன்னும் முழுமையாக மீட்சி பெறாவிடினும் பொருளாதாரரீதியிலும் கல்வியிலும் ஏனைய பிரதேசங்களோடு ஒப்பிடும் போது முன்னேறிய ஒரு பிரதேசமாகவே காணப்படுகின்றது.
என்றாலும் கடந்த சில காலங்களாக முன்வைக்கப்பட்ட ஒரு கோரிக்கைதான் சாய்ந்தமருதுக்கான தனியானதொரு பிரதேச சபை என்பது.
இக்கோரிக்கையானது முக்கியமாக தேர்தல் காலங்களில் பரவலாகப் பேசப்படுவதும் பின்னர் மறக்கப்பட்டு விடுகின்றதொரு விடயமாகவும் உள்ளது.
சனத்தொகையில் குறைவாகவும் ஏனைய பொருளாதார, கல்வி, வாழ்வாதார விடயங்களில் குறைந்த மட்டத்திலுமுள்ள பல பிரதேசங்களுக்கு தனியான பிரதேச சபை இருக்கின்ற போது, எமது சாய்ந்தமருது பிரதேசத்துக்கு தனியானதொரு பிரதேச சபை வழங்கப்பட முடியாமலிருப்பதற்கான காரணங்கள் என்ன என்பதை அறிய முடியவில்லை.
அண் மையில் கல்முனை மாநகர சபையில் ஏற்பட்ட ஒரு குழப்பமான நிலைமையின் போது ஒரு மாநகர சபை உறுப்பினரின் அறிக்கையிலே தற்போதய மாநகர முதல்வரைப் பதவி விலக்கும் போது சாய்ந்தமருதுப் பிரதேசத்தின் தனியான பிரதேச சபைக் கோரிக்கை மீண்டும் முன்வைக்கப்படலாம்.
எனவே தற்போதய முதல்வரையே பதவியில் வைத்திருக்க வேண்டும் என்ற கருத்துப்பட கூறினார். இது எதனை உணர்த்துகின்றது.
பாராளுமன்ற அரசியற் பலத்தைப் பெறக்கூடிய சக்தியிருந்தும் அதனைப் பெறாமல் கோட்டை விடுவதும் எமது பிரதேசத்துக்கு ஒரு பின்னடைவாகும்.
தற்போதய அரசியல்வாதிகளான மாகாண சபை உறுப்பினர், மாநகர முதல்வர், மாநகர சபை உறுப்பினர்களால் இதுவரைக்கும் எமது பிரதேசத்துக்கு தனியான பிரதேச சபை வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்படாமல் இருப்பதன் மர்மம் என்ன? இக்கோரிக்கையினால் தங்களின் அரசியற் பயணம் தடைப்பட்டு விடும் என்பதனாலா?
முஸ்லிம்களின் உரிமைகளை வென்றெடுப்பதெற்கென்று உருவான மு.கா. மர்ஹு ம் எம்.எச்.எம். அஷ்ரப் அவர்களினால் சாய்ந்தமருதில் வைத்தே அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு பின்னணியில் சாய்ந்தமருதுக்கு தனியானதொரு பிரதேச சபையை ஏன் பெற முடியாது என்பதை மு.கா. தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களிடமும் இப்பிரதேசத்தின் ஏனைய அரசியல் வாதிகளிடமும் பகிரங்கமாக விடுக்கின்றேன்.
பெற்றுத்தர முடியாவிட்டால் அதற்கான காரணங்களைப் பகிரங்கமாகத் தெளிவுபடுத்துங்கள் அல்லது தனியான பிரதேச சபையைப் பெற்றுத்தாருங்கள் என்று இப்பிரதேச மக்களின் சார்பாக கோரிக்கை விடுக்கின்றேன்.
இவ்வண்ணம்
வைத்திய கலாநிதி என் ஆரிப்
சாய்ந்தமருது.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்