கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தில் பாரபட்சம் காட்டப்படுவதாக புகார்


கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் பயிற்சிக்காக இணைக்கப்பட்டுள்ள பட்டதாரி பயிலுனர்களை அமைச்சுக்கள் மற்றும் திணைக்களங்களில் பயிற்சிக்காக இணைத்துக் கொள்வதில் அங்கு கடமையாற்றும் உயர் அதிகாரிகள் பாராபட்சம் காட்டுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறிப்பாக அங்கு கடமையாற்றும் நிருவாக உத்தியோகத்தர் தனது உறவினர்களையும், தனக்கு வேண்டியவர்களையும் மாத்திரமே அனைத்து அமைச்சுக்களினதும், திணைக்களங்களிதும் நேர்முகப் பரீட்சைகளுக்கு அனுப்பி குறிப்பிட்ட பட்டதாரி பயிலுனர்கள் திருப்தியடைந்தால் மாத்திரமே ஏனையவர்களிற்கு சந்தர்ப்பம் வழங்குவதாகவும் சுட்டிக்காட்டுகின்றனர். 

ஒரு குறிப்பிட்ட அமைச்சு, திணைக்களம் நேர்முகப் பரீட்சைக்காக பட்டதாரி பயிலுனர்களை அழைக்கும் போது தகுதியானவர்களை அனுப்பாது தனக்கு வேண்டியவர்களையும், உறவினர்களையும் மாத்திரமே சம்பந்தப்பட்ட நிருவாக உத்தியோகத்தர் அனுப்பி வருவதாகவும், இதன்காரணமாக தகுதியுள்ள பட்டதாரிகள் பாதிக்கப்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இன,மத பேதமற்ற இலங்கையை கட்டியெழுப்புவோம் எனக்கூறிவருகின்ற வேளையில் கல்முனை தமிழ் பிரிவு பிரதேச செயலகத்தில் காட்டப்படும் பாரபட்சமானது மனவேதனையளிப்பதாகவும் சம்பந்தப்பட்டோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக ஜனாதிபதி, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சர், அம்பாரை மாவட்ட இணைப்புக்குழுத் தலைவர், அரசாங்க அதிபர் ஆகியோர்களுக்கு மகஜர்கள் அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

காத்தான்குடி நகர சபை முன்னாள் உறுப்பினர் சலீம் உட்பட இருவர் விபத்தில் பலி