சமாதான நீதவான்கள் ஆவணங்களை உறுதிப்படுத்த பணம் அறவிட்டால் அவர்களின் பதவி பறிக்கப்படும் - நீதி அமைச்சு
JP
ஆவணங்களை உறுதிப்படுத்துவதற்கு சமாதான நீதவான்களுக்கோ வேறு நபர்களுக்கோ பணம் செலுத்த வேண்டாம் என பொதுமக்களிடம் நீதி அமைச்சு வேண்டுகோள் விடுத்துள்ளது.
சத்தியக்கடதாசி மற்றும் ஆவணங்களை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக வரும் பொதுமக்களிடம் சமாதான நீதவான்கள் சிலர் பணம் அறவிடுவதாக நீதி அமைச்சுக்கு முறைப்பாடுகள் கிடைத்த வண்ணமுள்ளன. இதனையெடுத்தே இவ்வேண்டுகோளை நீதி அமைச்சு விடுத்துள்ளது.
மேலும் அவ்றிக்கையில்
ஆவணங்களை எவற்றையும் உறுதிப்படுத்துவதற்காக சமாதான நீதவான்கள் எவ்விதமான பணத் தொகையையும் அறவிடக் கூடாதென அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள நியமனக் கடிதத்தில் நீதி அமைச்சு திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளது.
சமாதான நீதவான் பதவி இலவசமாக வழங்கப்படும் சேவை சம்பந்தமானது என்பதோடு ஆவணங்களை உறுதிப்படுத்துவது போன்ற சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வரும் பொது மக்களிடம் இருந்து பணம் கேட்டுப் பெறுவதற்கு அப்பதவி வகிப்போருக்கு எத்தகைய அதிகாரமும் கிடையாது.
இலவசமாக வழங்கப்படவேண்டிய இச்சேவைக்காக பணம் அறவிடும் சமாதான நீதவான்கள் தொடர்பில் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு, நீதி அமைச்சு, பொலிஸ் ஆகியவற்றிற்கு அறிவிப்பதற்கான உரிமை பொதுமக்களுக்கு உண்டு.
சமாதான நீதவான்கள் பணம் அறவிட்டதாக நிரூபிக்கப்பட்டால் அவர்களின் பதவிகளை பறிக்கும் அதிகாரம் நீதி அமைச்சருக்கு உள்ளது. இப்பதவிக்குப் பொருத்தமற்ற விதத்தில் செயல்பட்ட சமாதான நீதவான்களின் பதவிகளை இரத்துச் செய்வதற்கு நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதோடு, அவ்வாறான ஏனைய சமாதான நீதவான்கள் பற்றி முறைப்பாடுகள் கிடைத்தவண்ணமுள்ளன.
குறிப்பாக வெளிநாடுகளுக்குச் செல்லும் நபர்களின் ஆவணங்கள் மற்றும் சத்தியக்கடதாசிகளை உறுதிப்படுத்தும் சமாதான நீதவான்கள் மற்றும் சத்தியப்பிரமாண ஆணையாளர் ஆகியோரை உறுதிப்படுத்தும் பணி நீதி அமைச்சினால் மேற்கொள்ளப்பட வேண்டியதாகும்.
ஆவணங்களை உறுதிப்படுத்தும் சமாதான நீதவான், சத்தியப்பிரமாண ஆணையாளர் ஆகியோரை நீதி அமைச்சின் ஊடாக அத்தாட்சிப்படுத்துமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு சம்பந்தப்பட்ட நபருக்கு அறிவுறுத்தும்.
அதற்காக நீதி அமைச்சுக்கு வருவோரை இடைவழியில் சந்திக்கும் சமாதான நீதவான்கள் ஏற்கனவே வேறு சமாதான நீதவான்கள் அல்லது சத்தியப்பிரமாண ஆணையாளர் உறுதிப்படுத்திய ஆவணங்களை மீண்டும் உறுதிப்படுத்தி தமது கையொப்பத்தையும் முகவரியையும் குறிப்பிட்டு இலட்சிணையையும் பதித்து பணம் சம்பாதிக்கும் மோசடி கொழும்பு நகரத்திலும் அண்டிய பிரதேசங்களிலும் நடைபெறுவதும் அம்பலமாகியுள்ளது.
தமது ஆவணங்களை உறுதிப்படுத்தும் சமாதான நீதவானையோ சத்தியப்பிரமாண ஆணையாளரையோ உறுதிப்படுத்துமாறு வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சு அறிவுறுத்தும் சந்தர்ப்பத்தில் கொழும்பு 12 மீயுயர் நீதிமன்றக் கட்டிடத் தொகுதியில் நீதி அமைச்சின் இரண்டாவது மாடியில் அமைந்துள்ள சமாதான நீதவான்கள் பிரிவில் அதனை நிறைவேற்றிக் கொள்ளுமாறும், அதற்காக எவ்வித பணமும் அறிவிடப்படமாட்டது எனவும் அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment