மத்திய அரசிலிருந்து விலகி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் தனக்கு கிடையாது-அமைச்சர் ஹக்கீம்



மத்திய அரசிலிருந்துவிலகி கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடும் எண்ணம் தனக்கு அறவே கிடையாது என குறிப்பிட்டுள்ள நீதியமைச்சரும்,  ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம், மத்திய அரசில் இருந்து கொண்டே கிழக்கு மாகாண சபையில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை நிரூபிப்பதற்கு நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் நம்பிக்கைதெரிவித்தார்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸின் மாதர் அமைப்பின் சிங்களப் பிரிவொன்றை அம்பாறை மாவட்டத்தில்,தெஹியத்தகண்டியவில் வியாழக்கிழமை அங்குள்ள சாலிகா மண்டபத்தில்  அங்குரார்ப்பணம்செய்து வைத்து, உரையாற்றும் பொழுதே அவர் இதனைத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இக் கூட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஏ.எல்.அப்துல் மஜீத் (முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவர்) ஜவாத் (ரஸாக்) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
அப் பிரதேசத்தில்உள்ள கண் பார்வை குறைந்தோருக்கான மூக்குக் கண்ணாடி வழங்கும் நிகழ்வும் அப்பொழுது இடம்பெற்றது.
அமைச்சர் ஹக்கீம் அவ்வைபவத்தில் உரையாற்றும் பொழுது மேலும் தெரிவித்தாவது,
ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ மேற்கொண்டுள்ள அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் பற்றிய தெளிவு எங்கள் மத்தியில்இருக்கின்றது. ஊடகங்கள் எவற்றைக் கூறினாலும், கேலிச் சித்திரங்களில் என்னைப்பற்றி எவற்றை வரைந்தாலும் ஜனாதிபதிக்கும் இந்த அரசாங்கத்திற்கும் வழங்கிவரும் ஆதரவை அவசரப்பட்டு நீக்கிக்கொள்ளப்போவதில்லை.
பத்திரிகைகள் என்னைப் பற்றி பல்வேறு செய்திகளை வெளியிடுகின்றன. கிழக்கு மாகாண சபை தேர்தலில் முதலமைச்சராக நான் போட்டியிடுவேன் என பலவாறாக குறிப்பிட்டு செய்திகளை வெளியிட்டுவருகின்றன.
நான் ஒரு விடயத்தைமுக்கியமாக குறிப்பிட வேண்டும். கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிடுமாறு எனக்கு நிறைய வேண்டுகோள்கள் வந்தவண்ணமுள்ளன.
ஆனாலும், மத்திய அரசில் இருந்து நீங்கி நான் கிழக்கு மாகாண சபை முதலமைச்சர் பதவிக்கு போட்டியிட மாட்டேன். மத்திய அரசில் இருந்து கொண்டே ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பலத்தை கிழக்கு மாகாண சபையில் நிலைநாட்ட  முழு மூச்சாகப் பாடுபடுவேன்.
இதுவரை காலமும்மாகாண அரசாங்கம் கிராமத்தைத் தேடி வரவில்லை. மாகாண அரசாங்கத்தை மக்களின் காலடிக்குகொண்டு செல்ல வேண்டும். அந்தப் பொறுப்பை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் நிறைவேற்றும்.
சென்ற முறை கிழக்குமாகாண சபை தேர்தலின் போது நாங்கள் ஜனாதிபதிக்கு எதிராக எதிர்கட்சியின் ஊடாகப்போட்டியிட்டோம். இரு தரப்பினரும் சமமான பலத்துடன் யார் வெற்றிபெறுவார் என்ற எதிர்வுகூறமுடியாத அளவுக்கு அந்த போட்டி கடுமையானதாக அமைந்திருந்தது.
இறுதியில் அந்தத் தேர்தலில் அரசு ஐக்கிய தேசியக்கட்சியை விட சிறிய வாக்கு வித்தியாசத்திலேயே வெற்றி பெற்றது.
எவ்வாறாயினும், கிழக்குமாகாண சபை தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷமற்றும் அமைச்சர் பசில் ராஜபக்ஷ  ஆகியோருடன் கலந்துரையாடவுள்ளேன்.
அப்பொழுது ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸினால் முன்வைக்கப்படும் வேண்டுகோள்களுக்கு சாதகமான முடிவு  கிடைக்கும் எனஎதிர்பார்க்கிறேன்.
ஸ்ரீ லங்கா முஸ்லிம்காங்கிரஸைப் பொறுத்தவரை ஒரு வரலாற்று முக்கிய தினமாகும். அதாவது, இவ்வாறான பாரியசிங்களப் பிரதேசமொன்றில் இதுவரை எங்கள் கட்சிக்கு பெண்கள் கூட்டணி ஒன்று இருக்கவில்லை.
ஆகையால் இது மகிழ்ச்சியடைய  வேண்டியதினமாகும். இதன் ஊடாக பெண்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு தீர்வுகளை காண்பதற்கான வாய்ப்பை பெற்றுக்கொள்ளலாம்.
அரசியல் துறையில்பெண்களின் பிரதிநித்துவத்தை அதிகரிக்க வேண்டும். இது தொடர்பாக பாராளுமன்றத்திற்கு சட்டமொன்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. என்றாலும், இதுவரை அது கைகூடவில்லை.
பாராளுமன்றத்தில்மட்டுமல்ல உள்ளுராட்சி, பிரதேச சபைகளிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கவேண்டும். பெண்கள் அரசியலுக்குள் பிரவேசித்ததன் ஊடாக உலகின் முதல் பெண் பிரதமரை கொண்டநாடு என்ற பெருமையும் எமக்கே உரியது.
ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க அம்மையாரின் பெயரை சொன்னாலேஉலக நாடெங்கிழும் பெரும் வரவேற்புள்ளது.
இந்த பிரதேசத்தில்மாதர் அமைப்பினூடாக அநேக வேண்டுகோள்கள் எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளன. இது தொடர்பாக அரசமற்றும் வெளிநாட்டு உதவிகளைப் பெற்று பெண்கள் உந்து சக்தியாகச் செயலாற்ற நடவடிக்கை எடுக்கவுள்ளோம்.
இரண்டு அல்லது மூன்று கிராமங்களை உள்ளடக்கியதாக கைகளினால் இயக்கப்படும்இயந்திர தொழிற்சாலை, ஆடைத் தொழிற்சாலை, தானிய மாவரைக்கும் தொழிற்சாலை போன்றனவற்றில் அதிகமாக பெண்களை ஈடுபடுத்த உத்தேசித்துள்ளோம்.  இது பற்றி வேறு வேறாக அறிக்கைகளை தயாரிக்கவுள்ளோம்.
தெஹியத்தகண்டிபிரதேச மக்களுக்கு உதவுவதற்கு நாங்கள் இன்று வந்ததுள்ளது  தேர்தல் நோக்கமாக அல்ல. இந் நிகழ்வை தேர்தல்அறிவிக்கும் முன்னரே நாங்கள் நடாத்த தீர்மானித்திருந்தோம்.
கடந்த உள்ளுராட்சிமன்றத் தேர்தலின் போது யட்டிநுவர பிரதேச சபைக்கு ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒருசிங்களப் பெண்மணியை வெற்றியடைச் செய்தது. பெண்களிடம் உள்ள ஆற்றலை அதுவெளிப்படுத்துகிறது.
கிழக்குமாகாண சபை உரிய காலத்திற்கு முன்னரே கலைக்கப்படுவதை நாங்கள் வரவேற்கவில்லை. என்றாலும்அதற்கு நாங்கள் முகம் கொடுக்க வேண்டியதாயிற்று.
தற்பொழுதுநாட்டின் பல பகுதிகளிலும் நிலவும் கடும் வறட்சி காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளவிவசாயிகளுக்கு உதவி வழங்க 40000 மில்லியன் ரூபாவை ஒதுக்குவதற்கு ஜனாதிபதி மஹிந்தராஜபக்ஷ தீர்மானித்துள்ளதாக கடந்த அமைச்சரவை கூட்டத்தில் அறிவித்தார்.
அதேவேளை விவசாயிகளின் நிலப்பிரச்சினை தொடர்பாகவும் தீர்மானம் எடுக்க நடவடிக்கைமேற்கொள்ளப்பட்டுள்ளது.
தேசத்திற்கு மகுடம்அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் கிழக்கு மாகாணத்தை பெருமளவு அபிவிருத்தி செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் இங்கு ஸ்ரீ லங்காமுஸ்லிம் காங்கிரஸ் தெஹியத்தகண்டி மாதர் அமைப்பின் புதிய நிருவாகிகளை நியமிக்கும்நிகழ்வும் இடம்பெற்றது.
தெஹியத்தகண்டி ‘சீ’வலயத்தில் உள்ள பம்பரவான ஹங்கமாலகம தொலகந்த ஹலங்பதனாகல போன்ற கிராமங்களில்வாழும் நான்கு வறிய குடும்பங்களுக்கு வீடு கட்டிக்கொடுப்பதற்கான அடிகற்களையும் அமைச்சர் ஹக்கீம்நட்டி வைத்தார்.
இந்நிகழ்வில் அமரபுர சத்தம்மயுக்திக நிகாயே அநுநாயகவும் அமைச்சரின் ஆலோசகர் சாஸ்திரபதி தொடம்வல தம்மரத்தன நாயகதேரர், வனவாசி தேரர், அமைச்சரின் மக்கள் தொடர்பு அதிகாரி மஹிலால் த சில்வாஆகியோரும் உரையாற்றினர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்