வடக்கு , கிழக்கு மாகாணங்களை இணைப்பதற்கான அத்தனை சதி முயற்சிகளையும் தோற்கடிப்போம்!
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை என்று அமைச்சர் அதாவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியின் இப்தார் மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.
அத்துடன் கிழக்கு மாகாண சபை தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களையும் அக்கரைப்பற்று மக்கள் ஆதரிப்பது எனவும் அந்த மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த இப்தார் மாநாடு நேற்று ஞாயிற்றுக்கிழமை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் கட்சியின் தலைவரும் அமைச்சருமான ஏ.எல்.எம்.அதாவுல்லா தலைமையில் நடைபெற்றது.
இந்த மாநாட்டில் தேசிய காங்கிரஸ் வேட்பாளர்களான முன்னாள் மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை, முன்னாள் மாகாண சபை உறுப்பினர் ரி.ஏ.அமீர், சட்டத்தரணி ஆரிப் சம்சுதீன், சுபைர் ஹாஜியார் உட்பட கட்சியின் முக்கியஸ்தர்களும் அக்கரைப்பற்று அனைத்து பள்ளிவாசல்கள் சம்மேளேனம், அக்கரைப்பற்று ஜம்இய்யதுல் உலமா சபை, மற்றும் பொது அமைப்புக்களின் பிரதிநிதிகள் என பல பிரமுகர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.
இந்த மாநாட்டில் பின்வரும் நான்கு தீர்மானங்கள் ஏகமனதாக பிரகடனம் செய்யப்பட்டு நிறைவேற்றப்பட்டன..
*.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களை மீண்டும் இணைப்பதற்கு ஒருபோதும் அனுமதிப்பதில்லை. அதற்காக முன்னெடுக்கப்படும் அத்தனை சதி முயற்சிகளையும் தோற்கடித்தல்!
* எதிர்வரும் கிழக்கு மாகாண சபை தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் வெற்றிலை சின்னத்திற்கு அக்கரைப்பற்று வாழ் மக்கள் வாக்களித்தல்!
* அத்துடன் இத்தேர்தலில் தேசிய காங்கிரஸ் சார்பாக ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடும் நான்கு வேட்பாளர்களையும் அக்கரைப்பற்று மக்கள் ஆதரித்தல்!
* மன்னாரில் முஸ்லிம்கள எவ்வித தங்கு தடையுமின்றி மீளக்குடியேற்றப்பட வேண்டும்!
Comments
Post a Comment