எம்.எச்.எம்.அஷ்ரப் தொடர்பில் ரிவிர வெளியிட்ட செய்திக்கு றிசாத் கண்டனம் _

மறைந்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் அஸ்ஸஹீத் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறித்து சிங்களப் பத்திரிகையான ரிவிர வெளியிட்டுள்ள கருத்துக்கள் முஸ்லிம் சமூகத்தினைப் புண்படுத்துவனவாக அமைந்துள்ளதுடன்,ஒருவர் மரணித்த பின்னர் அவர் மீது அவதூறு கூறுவதை சகோதரத்துவத்தை விரும்பும் இஸ்லாம் கண்டிக்கின்றது என்று அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும்,அமைச்சருமான றிசாத் பதியுதீன் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

ரிவிர ஞாயிறு பத்திரிகையின் 27 ஆம் பக்கத்தில் எச்.டபிள்யூ.அபயபால என்பவரால் எழுதப்பட்டுள்ள கட்டுரையின் உள்ளடக்கத்தை வாசிக்கும் போது அது உண்மைக்கும்,மனித அறிவுக்கும் பொருத்தமற்றதாக உள்ளது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் கூறியுள்ளார்.

கதிர்காமத்தில் சிறுவன் ஒருவன் பௌத்த விகாரையில் வைத்து எதிர்வு கூறியதாக இந்தக் கட்டுரையில் எழுதப்பட்டுள்ள விடயங்கள் நம்பகத்தன்மைக்குரியதல்ல என்பதையும் இது வெறும் கட்டுக் கதையொன்றே எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.இவ்வாறு ஒவ்வொருவரும் எதிர்வு கூறல்களைச் செய்தால் இந்த நாடு குறித்து பெரும்கேள்வியே எழுந்திருக்க வேண்டும்.

முஸ்லிம்களைப் பொறுத்த வரையில் இறை விசுவாசம் முக்கியமானதாகும்,மறைவான விடயங்களில் நம்பிக்கை கொள்ள வேண்டியது கடமையாகும்.அந்த வகையில் மர்ஹூம் அஷ்ரப் அவர்களின் மறைவும் அப்படியானதே. இறைவனின் புறத்திலிருந்து வந்துள்ளதை முஸ்லிம்கள் தமது விசுவாசமாகக் கொள்கின்றனர்.

இந்த நிலையில் இற்றைக்கு 10 வருடங்களுக்கு முன்னர் விமான விபத்தில் மரணமான எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்கள் குறித்தும்,அதன் ஊடாக முஸ்லிம் சமூகம் பற்றி ஏனைய சமூகங்கள் மத்தியில் பிழையான சிந்தனையை தோற்றுவிக்கும் வகையிலும் தேசிய பத்திரிகையொன்று ஆக்கங்களை வெளியிடுவது பொருத்தமற்ற செயலென தாம் கருதுவதாகவும் தெரிவிக்கும் அமைச்சர் இந்த நாட்டில் ஊடக சுதந்திரம் இருக்கின்றது என்பதற்காக எதனையும் எழுதலாம் என்ற மன நிலை மாற வேண்டும் என்றும் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

அதே வேளை இக்கட்டுரை குறித்து வாரப் பத்திரிகையின் ஆசிரியருடன் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்ட அமைச்சர்,இந்த செய்தி குறித்து முஸ்லிம்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மன உளைச்சலை வெளிப்படுத்தியதுடன்,இவ்வாறான எதிர்வு கூறல்கள் சமூகத்தினது ஆரோக்கியத்திற்கு உகந்ததாக அமையாது என்றும் அமைச்சர் றிசாத் பதியுதீன் பிரஸ்தாபித்துள்ளார். 
___

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்