சகல பாடசாலைகளிலும் டெங்கு அபாய முன்னெச்சரிக்கைக்கான சிரமதானம்
இரண்டாம் தவணை 23ம் திகதி ஆரம்பம்:
கல்வி அமைச்சு பணிப்பு
இரண்டாம் தவணைக்காக அரசாங்க பாடசாலைகள் நாளை மறுதினம் 23 ஆம் திகதி ஆரம்பமாகும் போது பெற்றோர், பழைய மாணவர்கள், மாணவர்கள், நலன் விரும்பிக ளின் உதவியுடன் பாடசாலைகளில் சிரமதானமொன்றை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு சகல பாடசாலைகளின் அதிபர்களிடமும் கேட்டுக் கொண்டுள்ளது.
விசேட டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டமாக இந்த சிரமதான பணியை மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சின் செயலர் கேட்டுக் கொண்டுள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பின்னர் பாடசாலைகள் ஆரம்பமாவதால் வகுப்பறைகள், பாடசாலை வளவுகள், கூரைகள், கூரை பீலிகள், தண்ணீர் தாங்கிகள், அலுவலகம் போன்றவற்றில் டெங்கு நுளம்புகள் இருக்கலாம் என்ற அச்சம் காரணமாகவே இச்சிரமதான பணியை திங்கட்கிழமையன்று மேற்கொள்ளுமாறு கல்வி அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது. பழைய மாணவர் சங்கம், பெற்றோர், ஆசிரியர் சங்கம், நலன்விரும்பிகள், பாடசாலை ஆசிரியர்கள் ஆகியோரின் உதவியுடன் சிரமதானப் பணியை மேற்கொள்ளுமாறும் கல்வி அமைச்சின் செயலர் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேவையேற்படின் அப்பிரதேசத்திலுள்ள பொது சுகாதார உத்தியோகத்தர்களின், மாவட்ட சுகாதார அலுவலகத்தின் உதவிகளை பெற்றுக் கொள்ளுமாறு அதிபர்களிடம் கல்வி அமைச்சின் செயலாளர் கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பான சுற்று நிருபங்கள் சகல பாடசாலை அதிபர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் கல்வி அமைச்சு தெரிவிக்கிறது.
Comments
Post a Comment