அரசுடன் மு.கா. இணைந்தமை கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுந்தமைக்கு ஒப்பானது; மீள்வது எப்படி என்றும் தெரியும் என்கிறார் ஹக்கீம்!
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மஹிந்த ராஜபக்ஷவின் அரசாங்கத்துடன் சேர்ந்த நிகழ்வானது நாம் கண்ணைத் திறந்து கொண்டே குழியில் விழுந்தமைக்கு ஒப்பானதொரு செயலாகுமென்று. ஆனால் அதிலருந்து மீள்வது எப்படி என்றும் எமக்குத் தெரியும் என்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
முஸ்லிம்கள் விடயத்தில் அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடனும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பில் ஜனாதிபதியின் சகோதரர் அமைச்சர் பஷில் ராஜபக்ஷ எமது முஸ்லிம் காங்கிரசை கடும்போக்குடன் புறக்கணித்து நடப்பதையும் எம்மால் தொடர்ந்தும் எங்களால் சகித்துக் கொண்டிருக்க முடியாது எனவும் அவர் விசனம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் காத்தான்குடியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும்போதே அமைச்சர் ஹக்கீம் இவற்றைக் கூறினார்.
"தம்புள்ளை பள்ளிவாசல் விவகரம் உட்பட பல விடயங்கள் முஸ்லிம் காங்கிரஸினையும் முஸ்லிம் சமூகத்தினையும் பலவீனப்படுத்துகின்ற நிகழ்வுகளாக மாறியுள்ளன. இந்த நிலையில் அரசுடனான முஸ்லிம் காங்கிரஸின் இணைவானது சர்ச்சைக்குரிய ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.
முகா. உண்மையான அடையாளத்தை காட்ட வேண்டிய தருணம்!
இந்நிலையில்தான் முஸ்லிம் காங்கிரஸ் தனது உண்மையான அடையாளத்தினைக் காட்ட வேண்டியுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் எடுப்பார் கைப்பிள்ளையாக செயற்பட முடியாது. அரசாங்கத்தின் தேவைக்கும் அவர்களை நெருக்கடிகளில் இருந்து விடுவிப்பதற்காகவும் இந்த சந்தர்ப்பத்தில் எங்களுடைய நிலைப்பாட்டினை எடுக்க முடியாது
அரச உயர் மட்டத்திலிருந்து சில விருப்பங்கள் தெரியப்படுத்தப்படும் போது அதற்கேற்றவாறு நாம் ஒரு பல்லவியைப் பாடுவதென்கிற விடயம் முஸ்லிம் காங்கிரசிடம் சரிப்பட்டு வராது. அப்படி செய்து சமூகத்தை காட்டிக் கொடுக்க நாம் தயாரில்லை.
அரசுடன் நமது முஸ்லிம் காங்கிரஸ் சேர்ந்த விடயம் ஒற்றுமையாகக் கையாளப்பட்டிருந்தால் அது மிகச் சிறந்ததொரு இணைவாக மாறியிருக்கும். ஆனால் இன்னுமொரு பிளவினை இந்தக் கட்சி தாங்கிக் கொள்ளாது எனும் நிலையில்தான் நாம் அரசுடன் இணைந்தோம். எனினும் மு.கா அரசுடன் ஒட்டிக் கொண்டதன் மூலம் நமக்குள் சிலர் எதிர்பார்த்த எவையும் கிடைக்கவில்லை.
பதவி ஆசைக்கு ஆப்பு வைப்பேன்!
முஸ்லிம் காங்கிரசிலுள்ள சிலருக்கு பதவி ஆசை இன்னும் இருந்து கொண்டே இருக்கிறது. இதற்காக கட்சிக்கு அப்பால் சென்று அரசாங்கத்துடன் தனிப்பட்ட உறவுகளைப் பேணி தமது அபிலாசைகளை அடைந்து கொள்வதற்கு யாராவது முயன்றால் அவற்றினை முறியடிப்பதற்கு மு.கா. தலைமைத்துவம் நிச்சயமாக வியூகங்களை வகுக்கும்.
அரசாங்கத்தோடு மு.கா. இணைந்ததன் மூலமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றுக் கொடுத்துள்ளது. அதன் மூலமாக தம்புள்ளயில் இன்று அரசாங்கம் நினைத்ததைச் செய்வதற்கு வழிசமைத்துக் கொடுத்திருக்கின்றோம். ஆனால் எமது பலம் முழுமையாக அற்றுப் போகவில்லை. தமது பிரச்சினைகள் தொடர்பில் தமிழ் சமூகம் சர்வதேசத்தினைப் பயன்படுத்தியமை போன்று முஸ்லிம் சமூகத்தினால் ஏன் முடியாது? இந்த விடயத்தில் சர்வதேசத்தினை மிகத் திறமையாக முஸ்லிம் காங்கிரஸால் பயன்படுத்த முடியும்.
ஆபத்தான கட்டத்தில் அரசாங்கம் இருப்பதை ஆட்சியிலுள்ளவர்களும் உணர்ந்து கொள்ள வேண்டும். இந்த விடயத்தில் வெறும் போடுகாய்களாக எங்களைக் கணக்கில் எடுப்பதற்கு நாங்கள் இடமளிக்க முடியாது. எதற்காகவும் நாங்கள் பயந்து ஒதுங்க வேண்டிய அவசியமில்லை. நாம் நம்பும் படியாக ஜனாதிபதி நடந்து கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் படுகுழியில் இருந்து மீள்வது எப்படி என்றும் எமக்குத் தெரியும்" என்றும் அமைச்சர் ஹக்கீம் குறிப்பிட்டார்.
Comments
Post a Comment