தம்புள்ளை பள்ளிவாசல் சம்பவம் முஸ்லிம் நாடுகளின் மத்தியல் இலங்கை பற்றி தப்பான நிலைப்பாட்டை தோற்றுவிக்க நிச்சயமாக வழிவகுக்கும்! கல்முனை முதல்வர் சிராஸ் அறிக்கை!
தம்புள்ளையில் முஸ்லிம்கள் தொழுகைக்காக பல தசாப்தங்களாகப் பயன்படுத்தி வந்த பள்ளிவாசல், ஒரு சில பேரின வாத சக்திகளின் தூண்டுதலினால் சேதப்படுத்தப்பட்டதானது ஜனநாயகத்துக்கு முரணான செயலாகும். இந்த அநாகரிகமான செயலுக்கு மதப்போதகர்கள் துணை போனமை வருத்துக்குரிய விடயமாகும். இதை தான் வன்மையாகக் கண்டிக்கிறேன் என கல்முனை மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிப் குறிப்பிட்டார்.
அவர் தொடர்ந்து கூறுகையில்
கடந்த 30 வருடங்களாக எமது நாட்டில் புரையோடிப் பேயிருந்த கொடிய யுத்தம் நிறைவுக்கு வந்து மூவின மக்களும், கடந்த கால கசப்புணர்வுகளை மறந்து, இன நல்லுறவை கட்டியெளுப்ப பாரிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் இத் தருணத்தில், இவ்வாறன அருவருக்கத் தக்க செயற்பாடுகள், தோற்றுவிக்கப்ட்டுள்ள, இன நல்லுறவில் விரிசலை உண்டுபண்ணும் என்பதில் எவ்வித ஐயப்பாடுகளும் இல்லை.
கடந்த சில நாட்களுக்கு முன்பதாக இலங்கையில் வாழும் முஸ்லிம்கள், இலங்கை நாட்டுக்கு எதிராக ஜெனீவாவில் கொண்டுவரப்பட்ட மனித உரிமை மீறல் பிரேரனைகளின்போது, நாட்டுக்காகவும், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்காகவும் வீதிகளில் இறங்கி ஆர்ப்பாட்டங்கள் செய்து முஸ்லிம் நாடுகளின் கவனங்களை ஈர்க்கச்செய்தது மறுக்கப்படமுடியாத உண்மையாகும்.
அதுமாத்திரமல்லாது ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்த நாடுகளுள் அநேகமானவை முஸ்லிம் நாடுகள் என்பதுடன், இலங்கையின் பொருளாதாரத் துறையில் அதிக வலுச்சேர்க்கும், அந்நியச்செலாவணியை, பெரும்பாலான இலங்கையர்கள் தொழில் வாய்ப்புகளைப் பெற்று அதிகமாக ஈட்டிக்கொள்வதும் இவ்வாறான முஸ்லிம் நாடுகளிலேயே என்பதும் நிதர்சனமாகும்.
எனவே இதுபோன்ற செயல்கள் முஸ்லிம் நாடுகளின் மத்தியல் இலங்கை பற்றி ஒரு தப்பான நிலைப்பாட்டை தோற்றுவிக்க நிச்சயமாக வழிவகுக்கும், ஆகையால் இவ்வாறான பாதகச்செயலில் ஈடுபட்டவர்கள் யாராக இருப்பினும் அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும். என்பதுடன், இனிவரும் காலங்களில் இதுபோன்ற வரலாற்றுத் தவறுகளை விடுவதில் இருந்து, விடுபடுதலானது காலத்தின் கட்டாயமாகும். என்றார்.
Comments
Post a Comment