தம்புள்ளை நகரில் பள்ளிவாசல் மீது தாக்குதல்
சுமார் 500க்கும் மேற்பட்டோரைக் கொண்ட குழுவினர் பள்ளிவாசலை நோக்கிப் பேரணியாக வந்த பின்னரே இப் பள்ளிவாசல் வளாகத்துக்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தற்போது இப் பள்ளிவாசலைக் குறித்த தரப்பினர் தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளதாகவும் பள்ளிவாசல் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.
இன்று காலை தம்புள்ளையிலுள்ள பிரபல விகாரை ஒன்றில் ஒன்றுதிரண்ட பெரும்பான்மை இனத்தவர்கள் பௌத்த பிக்குகள் தலைமையில் பேரணியாகச் சென்று இப் பள்ளிவாசல் மீது கல் வீசித் தாக்கியதாகவும் பின்னர் பள்ளிவாசல் வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் சம்பவத்தை நேரில் கண்டவர்கள் தெரிவிக்கின்றனர்.
சம்பவ இடத்தில் பொலிஸாரும் விசேட அதிரடிப் படையினரும் பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டிருந்தபோதிலும் அவர்களது கட்டுப்பாட்டையும் மீறியே இச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இன்று வெள்ளிக்கிழமை வழக்கமாக இடம்பெறும் ஜும்ஆ பிரசங்கமும் தொழுகையும் இடம்பெறவில்லை எனவும் அதற்கான தயார்படுத்தல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தசமயமே இத் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இச் சம்பவம் தொடர்பில் கண்டன அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அகில இலங்கை ஜம்இய்யதுல் உலமா, பாரிய அசம்பாவிதங்கள் எதுவும் ஏற்படாதிருக்கும் வகையிலும் பள்ளிவாசலைப் பாதுகாக்கும் நோக்கிலும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு இலங்கை வாழ் முஸ்லிம்களைக் கோரியுள்ளது. அத்துடன் இச் சம்பவம் தொடர்பில் உரிய கவனம் செலுத்துமாறு கோரி உலமா சபையினால் ஜனாதிபதிக்கு அவசரக் கடிதம் ஒன்றும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இச் சம்பவத்தைக் கண்டித்துள்ள ஐக்கிய தேசியக் கட்சியின் மேல் மாகாண சபை உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான், அரசாங்கத்தின் ஆதரவுடனே முஸ்லிம்களுக்கு எதிராக இவ்வாறான வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளார். இதேவேளை இச் சம்பவத்தைப் பயன்படுத்தி ஐக்கிய தேசியக் கட்சி அரசியல் இலாபம் தேட முனைவதாகக் குறிப்பிட்ட மேல் மாகாண ஆளுநர் அலவி மௌலானா, இது தொடர்பில் ஜனாதிபதியினதும் பிரதமரினதும் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவதாகவும் குறிப்பிட்டார்.
“ஜும்ஆ தொழுகையும் இடம்பெறவில்லை, மிகுந்த கவலையடைகிறோம்” – பாதிக்கப்பட்ட நபர்
பௌத்த பிக்குகளும் சிங்கள மக்களும் மேற்கொண்ட ஆர்ப்பாட்டம் மற்றும் தாக்குதல் காரணமாக ஜும்ஆ தொழுகையை மேற்கொள்ள முடியவில்லை என பாதிக்கப்பட்ட பிரமுகர் ஒருவர் வீரகேசரி இணையத்தளத்துக்குத் தெரிவித்தார்.
“பள்ளிவாசலுக்குள் நுழைந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொருட்களை சேதப்படுத்திவிட்டுச் சென்றுள்ளனர். வெள்ளிக்கிழமை தொழுகையில் சுமார் 900 முஸ்லிம்கள் கலந்துகொள்கிறோம். தம்புளைக்கு வர்த்தக நோக்கத்துக்காக வருகைதரும் முஸ்லிம்களும் இங்குதான் தொழுகைக் கடமையை நிறைவேற்றுகிறார்கள். இன்று நடைபெற்ற இச்சம்பவம் எம்மை வருத்தத்துக்கு உள்ளாக்கியுள்ளது.
இப்போது எமக்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. எனினும் மீண்டும் பிரச்சினை எழலாம் என்ற அச்சமே முஸ்லிம்கள் மத்தியில் நிலவுகிறது. _
Comments
Post a Comment