மு.காவுக்குள் மீண்டும் குழப்பம்! அதாவுல்லா பக்கம் தாவுகின்றார் முக்கிய பிரமுகர்!


ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் அக்கரைப்பற்று அமைப்பாளரும், அதி உயர்பீட உறுப்பினருமான யூ.எல். உவைஸ் தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ளார் எனக் கூறப்படுகின்றது.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் செயற்பாடுகளில் அதிருப்தியடைந்த நிலையில் அக்கட்சியிலிருந்து விலகி அமைச்சர் அதாஉல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸ் கட்சியில் யூ.எல்.உவைஸ் இணையவுள்ளார் என நம்பகரமாகத் தெரியவருகின்றது.
அமைச்சர் அதாஉல்லாவுக்கும், யூ.எல். உவைஸுக்குமிடையில் இன்று பேச்சு ஒன்று மிக இரகசியமாக இடம்பெற்றுள்ளது. இந்தப் பேச்சில் யூ.எல்.உவைஸ் முன்வைத்த கோரிக்கைகளை அமைச்சர் அதாஉல்லா ஏற்றுக்கொண்டுள்ளார் எனவும் உத்தியோகபூர்வ கட்சி மாற்றம் மார்ச் மாதம் அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ளது எனவும் அறியவருகின்றது.
அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறியமையின் பின்னர், அக்கரைப்பற்றில் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைக் கட்டிக்காத்தவர் யூ.எல்.உவைஸ் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்து அக்கரைப்பற்று மாநகரசபை உறுப்பினர் ஏ.எல்.தவம் வெளியேற இருக்கின்றதொரு நிலையில், யூ.எல்.உவைஸின் வருகையை அமைச்சர் அதாஉல்லா ஆவலுடன் எதிர்பார்க்கின்றார் என்றும் தவத்துக்கு ஒரு பாடத்தை உவைஸின் வருகை மூலம் புகட்ட எண்ணியுள்ளார் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை, தேசிய காங்கிரஸ் கட்சியில் இணையவுள்ள யூ.எல்.உவைஸிற்கு இணைப்பாளர் பதவி வழங்கப்படுகின்றமையோடு எதிர்வரும் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுகின்றமைக்கும் வாய்ப்பு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது