கல்முனை குடும்பஸ்தரின் சடலத்தை ஒப்படைப்பதில் ஆஸ்பத்திரிகள் அசமந்தம்!


உயிர் பிரிந்த பின்னரும் உடலுக்கு நிம்மதியில்லை;


ஆஸ்பத்திரியில் மரணித்த ஒருவரின் சடலத்தை உறவினர்கள் எடுத்துச் செல்வதற்கு ஆஸ்பத்திரி உயர் அதிகாரிகளிடம் கெஞ்சி மன்றாடி வரம் கேட்கும் கேவலமான நிலை கல்முனையில் ஏற்பட்டுள்ளது.
கல்முனை வடக்கு ஆஸ்பத்திரி, கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரி இரண்டுமே இந்தப் பிரதேசத்தில் சகல வசதிகளுடன் இயங்கும் ஆஸ்பத்திரிகள்.
என்றாலும், இங்கு பணியாற்றுகின்ற ஒருசில உயர் அதிகாரிகளின் அசமந்தப் போக்கினால், மாரடைப்பால் இறந்த ஒருவரது சடலம் இரண்டு ஆஸ்பத்திரிகளிலும் அலைமோதி அல்லல் பட்டது.
மனிதாபிமானமும் மனித உணர்வும் இல்லாத அதிகாரிகளால் காலை 7 மணி யளவில் மரணித்த ஒரு வரின் சடலம் இரவு ஆகியும் உறவினர்க ளிடம் கையளிக்க முடி யாத நிர்வாகச் சீர்கேடு மேற்படி இரு ஆஸ்பத் திரிகளிலும் மிகத் தாரா ளமாகவே இருக்கிறது. கடந்த 17ம் திகதி இங்கு நடந்த சம்பவம் உறவினர்களை மாத்திரமல்ல, சாதாரண மக்களையும் கொதிப்படையச் செய்யும்.
கல்முனையைச் சேர்ந்த செல்வக்குமார் (37 வயது) என்பவர் திடீர் நோய்வாய்ப்பட்டு கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த ஆஸ்பத்திரிக்குக் கொண்டு செல்லும் போது மாரடைப்பினால் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் காலை 7 மணியளவில் நடந்தது.
அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போதே உயிர்பிரிந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்ததோடு பிரேத பரிசோதனை நடத்த வேண்டுமென கூறப்பட்டது. என்றாலும், சடலத்தைப் பெறுப்பேற்க உறவினர்கள் சென்ற போதும் ‘கொரணர்’ வந்து பிரேத பரிசோதனை நடத்திய பின்பே தரமுடியுமென ஆஸ்பத்திரி அதிகாரிகள் கூறியுள்ளனர் என்றாலும் நண்பகல் வரை சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படவில்லை.
உறவினர்கள் சடலத்தைக் கேட்ட போதெல்லாம்” உரிய அதிகாரிகள் இல்லை..., வந்ததும் பிரேத பரிசோதனை முடித்து ஒப்படைப்போம்” எனக் கூறப்பட்டதோடு இழுத்தடிப்புச் செய்யப்பட்டே வந்தது. பொறுமை இழந்த உறவினர்கள், “ஏன் இப்படி வைத்து இழுத்தடிக்கிaர்கள்.. தாமதியாது சடலத்தைத் தாருங்கள். இறுதிக் கிரியைகளுக்கான பணிகளைச் செய்ய வேண்டும்...” என அஷ்ரஃப் ஆஸ்பத்திரி உயர் அதிகாரி ஒருவரிடம் கேட்டுள்ளனர்.
அலட்சியப் போக்கோடு பதிலளித்த அவர், “இங்கு சட்ட வைத்திய அதிகாரியும் இல்லை. சடலத்தை வெட்டும் பணியாளரும் இல்லை.
எனவே சடலத்தை அம்பாறை அல்லது மட்டக்களப்பு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனையின் பின்னர் எடுத்துச் செல்லுங்கள்” என்றாராம்.
இவ்வாறு கூறிய அந்த அதிகாரி “விரும்பிய ஆஸ்பத்திரியை சொல்லுங்கள் அனுப்பி வைக்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
இதற்கமைய அம்பாறை மட்டக்களப்பு அல்ல அருகிலுள்ள கல்முனை வடக்கு தேசிய வைத்தியசாலைக்கு அனுப்புமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டனர். அதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
ஆனால், ஆஸ்பத்திரியில் அம்பியூலன்ஸ் இல்லாததால் வேறொரு வாகனத்தில் ஏற்றிச் செல்லுமாறு ஆஸ்பத்திரி அதிகாரிகள் உறவினர்களுக்கு உத்தரவிட்டுள்ளனர். (பணித்துள்ளனர்.)
அன்றைய தினம் நண்பகல் 2 மணியளவில் சடலத்தை வேறொரு வாகனத்தில் ஏற்றிச் சென்று கல்முனை வடக்கு ஆஸ்பத்திரியில் ஒப்படைத்தனர்.
அஷ்ரஃப் ஆஸ்பத்திரியில் வழங்கப்பட்ட கடிதத்துடன் சடலத்தை ஏற்க தயக்கங்காட்டிய அங்குள்ள பணியாளர்கள், ஒருவாறு பிரேதத்தை உள்ளே இழுத்துச் சென்றனர்.
என்றாலும் சட்ட வைத்திய அதிகாரி இல்லாததால் மரண பரிசோதனையை நடத்த முடியாதென கல்முனை வடக்கு ஆஸ்பத்திரி மருத்துவ அத்தியட்சகர் தெரிவித்துள்ளார்.
இதனைச் செவிமடுத்த ஆஸ்பத்திரி பொலிஸார் நீதவானின் அனுமதியைப் பெறுவதற்கான முயற்சிகளில் இறங்கினர்.
இதற்கிடையில், இறந்தவரின் உறவினர்களும் ஊர்மக்களும் கல்முனை வடக்கு மருத்துவ அத்தியட்சகரிடம் நேரடியாகப் பேசினர். வைத்திய அத்தியட்சகருடன் நடந்த காரசாரமான வார்த்தைப் பிரயோகங்களின் பின்னர் அந்த அத்தியட்சகர் ஒருவாறு மருத்துவப் பரிசோதனைக்கு அனுமதி வழங்கியுள்ளார்.
அஷ்ரஃப் வைத்தியசாலையில் இருந்து பி.ப. 1.30க்கு கொண்டுவரப்பட்ட சடலம் இரவு 7 மணியளவிலேயே உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.
கல்முனைப் பிரதேசத்தில் மிகவும் அருகருகே உள்ள இரு மிகப் பெரிய தேசிய வைத்தியசாலைகளில் பிரேத பரிசோதனை நடத்தக் கூடிய அதிகாரிகளும் அதற்கான பணிப்பாளர்களும் இல்லை என்று கூறுவதும், சடலத்தை வைத்துக் கொண்டு மக்களின் உணர்வுகளோடு விளையாடுவதும் ஏற்புடையதல்ல.
ஆஸ்பத்திரிகளில் பணிபுரிபவர்களுக்கு இது பொருட்டாகத் தெரியவில்லையென்றாலும் உயிரை இழந்து தவித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தினருக்கு உடலையும் பெற முடியாத நிலை ஏற்படும் போது ஏற்படும் வேதனையையும் உணர்வையும் சம்பந்தப்பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
பதவியிலிருந்து கொண்டு இப்போது அதிகார துஷ்பிரயோகங்களில் ஈடுபடும் அதிகாரிகளுக்கு, இதே நிலை ஏற்பட்டால் எப்படி இருக்கும்?
தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இந்தப் பிரதேசத்தில் சடலமொன்று பந்தாடப்பட்டிருப்பது குறித்து சுகாதார அமைச்சின் கவனத்துக்கும் கொண்டுவரப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது