ஐ.தே.க. தலைவர் ரணிலா? கருவா? ஸ்ரீகொத்தாவில் இன்று தேர்தல்



பிரதித்தலைவர் பதவிக்கு ரவி, சஜித் போட்டி
ஐக்கிய தேசியக் கட்சியின் 2012 ஆம் ஆண்டிற்கான தலை வர், பிரதித் தலைவர் மற்றும் தேசிய அமைப்பாளரைத் தெரிவு செய்வதற்கான தேர்தல் இன்று நண்பகல் நடைபெறவுள்ளது. மிகவும் பரபரப்பானதொரு சூழ்நிலையில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
இப்பதவிகளுக்காக போட்டியிட விரும்புவோர் இன்று காலை 10 மணி வரை ஸ்ரீகொத்தா விலுள்ள ஐ.தே.கட்சி அலுவலகத்தில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்யுமாறும் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கேட்டுக் கொண் டுள்ளார்.
ஐ.தே.க.வின் அரசியல் யாப்பின்படி 2012 ஆம் ஆண்டுக்கான கட்சியின் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கென கரு ஜயசூரிய எம்.பியும் ரணில் விக்கிரம சிங்கவும் வேட்புமனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.
பிரதித் தலைவர் பதவிக்காக சஜித் பிரேமதாஸ எம்.பி.யும் ரவி கருணாநாயக்க எம்.பியும் தேசிய அமைப்பாளர் பதவிக்காக தயாசிறி ஜயசேகர எம்.பியும் தயா டி கமகே எம்.பியும் நேற்று மாலை மூன்று மணிக்குள்ளாக வேட்புமனுக்களைத் தாக்கல் செய்திருந்ததாகவும் ஸ்ரீகொத்தா வட்டாரங்கள் தெரிவித்தன.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்றுக் காலை ஸ்ரீகொத்தாவிலுள்ள கட்சி அலுவலகத்தில் கூடியது. இதன் போது 2012 ஆம் ஆண்டுக்கான கட்சியின் உபதலைவராக ஜோசப் மைக்கல் பெரேராவும் தவிசாளராக காமினி ஜயவிக்கிரம பெரேராவும் கட்சி உறுப்பினர்களால் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டனர்.
இந்நிலையில் முக்கியப் பதவிகளை தலைவர், பிரதித்தலைவர் மற்றும் கட்சியின் தேசிய அமைப்பாளர் பதவிகளுக்கான நியமனங்களே இன்று நடைபெறவுள்ளது.
கட்சி உறுப்பினர்களது ஒருங்கிணைந்த கூட்டத்தின் போது இன்று நண்பகல் இதற்கான விசேட வாக்கெடுப்பு நடத்தப்படுமெனவும் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க எம்.பி கூறினார்.
ஐ.தே.கவுக்குள் ஏற்பட்டுள்ள தமைமைத்துவ நெருக்கடிக்குத் தீர்வுகாணும் வகையில் இந்தத் தேர்தல் நடத்தப்படுகிறது.
மேற்படி பதவிகளுக்கான தேர்தலில் சஜித் அணியினரும், ரணில் விக்கிரமசிங்க சார்பு அணியினருமே ஏட்டிக்குப் போட்டியாக களத்தில் குதித்துள்ளனர்.
யார் போட்டியிட்டாலும் தானே தொடர்ந்தும் தலைவராக தெரிவு செய்யப்படுவாரென ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார்.

ஐ.தே.கட்சி யாப்பின்படி செயற்குழு உறுப்பினர்கள் 73 பேரும் ஐ.தே.க. பாராளுமன்ற உறுப்பினர்களுமே தேர்தலில் வாக்களிக்கத் தகுதி பெற்றவர்களாவர்.
இதற்கமைய இன்றைய வாக்கெடுப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்குமென எதிர்பார்க்கப் படுகிறது. அசம்பாவிதங்கள் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் ஸ்ரீகொத்தாவில் பலத்த பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது