மாணவர்களை ஏற்றிசெல்லும் வான்களை பதிவு செய்ய வேண்டும்
தவறினால் சட்ட நடவடிக்கை
பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வேன்கள் (SCHOOL VAN) அனைத்தும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் ஒழுங்குபடுத்தலின் கீழ் 2012ஆம் ஆண்டுக்குரிய பதிவை செய்துகொள்ளுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு பதியப்படாத வேன்களுக்கு எதிராக பொலிஸாரின் உதவியுடன் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அறிவித்துள்ளது. மாணவர்களுக்கு இம்சை ஏற்படுத்தும் விதத்தில், ஆபத்தை ஏற்படுத்தும் விதத்தில் சேவையிலீடுபடும் வேன்கள், பஸ் வண்டிகள், முச்சக்கர வண்டிகள் இருப்பின் 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்துக்கு தொடர்பு கொண்டு முறைப்பாடு செய்யுமாறும் பெற்றோரை, ஆசிரியர்களை, பொதுமக்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை கேட்டுக்கொண்டுள்ளது.
குறிப்பிட்ட ஆசனங்களுக்கு மேல் அதிகளவு மாணவர்களை ஏற்றிச் செல்லல் வீதிகளில் செல்லும்போது மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் வாகனங்களின் நிலையை வைத்திருத்தல், போன்ற விடயங்களை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும், பொலிஸாரும் மோட்டார் போக்குவரத்து திணைக்களமும் இணைந்து பரிசீலனை செய்யும். பாடசாலை வேன்கள் 2012ஆம் ஆண்டு பதிவு செய்வதற்கான விண்ணப்பப்படிவங்களை ஏற்றுக்கொள்ளும் இறுதி நவம்பர் 30 திகதி வரை எனவும் அதிகார சபை அறிவித்துள்ளது.
பாடசாலை வேன்களாக, பஸ் வண்டிகளாக பயன்படுத்தப்படும் வாகனங்கள் தரமானதாக இருக்க வேண்டும். சிலர் ஓரங்கட்டிய வாகனங்களை புதுப்பித்து எந்தவித ஒழுங்கும் இல்லாமல் துருப்பிடித்த நிலையில் வாகனங்களை பாடசாலை வாகனங்களாக பயன்படுத்த முயற்சிக்கின்றன.
எனவே பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் வாகனங்களும் தரமானதாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்தில் பதிவு முறையை துரிதப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
2012 ஜனவரி மாதம் பாடசாலைகள் ஆரம்பமாவதற்கு முன்னர் சகல பாடசாலை வேன்களும் சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையின் பதிவுகள் பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் கேட்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment