அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும் எனும் நூலின் வெளியீடு; கல்முனை மேயருக்கு "மருதமணி பட்டம்"
பிரபல பன்னூலாசிரியரும் ஊடகவியலாளருமான சாய்ந்தமருது எம் எம் எம் நூறுல் ஹக் எழுதிய 'அரசியல் சிந்தனைத்துவமும் சமூக இருப்பும்' எனும் நூலின் வெளியீட்டு விழா இன்று புதன்கிழமை மாலை கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.
மருதம் கலை இலக்கிய வட்டத்தின் ஏற்பாட்டில் ஓய்வுபெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மத் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப் பிரதம அதிதியாகவும் முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் கௌரவ அதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
இந்நிகழ்வில் மெட்ரோ மிரர் செய்தி இணையத்தள முகாமைத்துவ ஆசிரியர் செயிட் அஸ்லம் எஸ்.மௌலானா தொடக்கவுரையையும் கவிஞர் நவாஸ் சௌபி நூல் ஆய்வுரையையும் நிகழ்த்தினர். அம்பாறை மாவட்ட வீதி அபிவிருத்தித் திணைக்கள பிரதம பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி நூலின் முதற் பிரதியைப் பெற்றுக்கொண்டார்.
இதன்போது கல்முனை மாநகர சபை முதல்வர் சிராஸ் மீராசாஹிப், மருதம் கலை இலக்கிய வட்டத்தினால் "மருதமணி" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அமைப்பின் தலைவர் ஏ.எம்.நஸீர், தவிசாளர் நவாஸ் சௌபி, ஊடகச் செயலாளர் அஸ்லம் எஸ்.மௌலானா ஆகியோரினால் பொன்னாடை போர்த்தி பட்டச் சான்றிதழ் கையளிக்கப்பட்டது.
அதேவேளை இந் நிகழ்வில் பொறியியலாளர் ஏ.எம்.றிஸ்வி அவர்களுக்கு மருதம் கலை இலக்கிய வட்டம், "கலைநேசர்" பட்டம் வழங்கி கௌரவித்தது. அத்துடன் முன்னாள் பிரதி அமைச்சர் சட்டத்தரணி எஸ்.நிஜாமுதீன் அவர்கள் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.
Comments
Post a Comment