பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுடன் சட்டத்தரணி நிசாம் காரியப்பர் சந்திப்பு; கல்முனை அபிவிருத்திக்கு முழு ஒத்துழைப்பு வழங்க உறுதி
கல்முனை மாநகர பிரதேசங்களை திட்டமிட்ட முறையில் அபிவிருத்தி செய்வதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்படும் என பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கோட்டாபய ராஜபக்ஷ, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதி செயலாளர் நாயகமும் அக்கட்சியின் கல்முனை மாநகர சபைக்கான முதன்மை வேட்பாளருமான சட்டத்தரணி நிசாம் காரியப்பரிடம் உறுதியளித்துள்ளார்.
பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கும் சட்டத்தரணி நிசாம் காரியப்பருக்கும் இடையிலான சந்திப்பு இன்று புதன்கிழமை மாலை பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றபோதே இவ்வுத்தரவாதம் வழங்கப்பட்டிருக்கிறது. இச்சந்திப்பின்போது தனது தேர்தல் விஞ்ஞாபனத்தை பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிடம் கையளித்த சட்டத்தரணி நிசாம் காரியப்பர், அதில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி விரிவாக எடுத்துரைத்தார்.
இத்திட்டங்கள் அனைத்தும் பொதுமக்களுக்கு மிகவும் தேவையானவை என தெரிவித்த கோட்டாபய ராஜபக்ஷ தான் இவற்றுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவேன் என்றும், அத்துடன் நகர அபிருத்தி அதிகார சபையினால் கொழும்பு மாநகரத்தில் மேற்கொள்ளப்படும் அபிவிருத்தி செயற்பாடுகள் போன்ற திட்டங்களை கல்முனை மாநகரத்திலும் அமுல்படுத்தவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ உறுதியளித்துள்ளார்.
வெள்ளத்தினால் மூழ்கும் கல்முனை பிரதேசத்தில் நவீன முறையிலான வடிகான் அமைப்பு திட்டத்தை நகர அபிவித்தி அதிகார சபை மற்றும் கல்முனை மாநகர சபை ஆகியன இணைந்து தயாரிக்க பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் நகர அபிவிருத்தி அதிகார சபையின் தலைவருமான கோட்டாபய ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்தார். கல்முனை மாநகர மேயராக தாங்கள் தெரிவு செய்யப்பட்ட பின்னர் சர்வதேச நாடுகளின் உதவிகளுடன் கல்முனை மாநகரத்தில் மேற்கொள்ளப்படும் அனைத்து அபிருத்தி நடவடிக்கைகளுக்கும் அனுசரணை வழங்க அரசும் நகர அபிவிருத்தி அதிகார சபையும் கூடிய கரிசனையுடன் பங்காற்றும் எனவும் கோட்டாபய ராஜபக்ஷ நிசாம் காரியப்பரிடம் தெரிவித்தார்.
அத்துடன் நாவலப்பிட்டியில் புதிய நகரம் ஒன்று அமைக்கப்பட்டமை போன்று கல்முனையிலும் ஒரு புதிய நகரத்தை அமைக்குமாறும் அதற்கு சகல வகையான உதவிகளும் வழங்கப்படும் எனவும் அவர் கூறினார். இதற்காக கல்முனை மேட்டு வட்டை வயல் பிரதேசத்திலுள்ள சதுப்பு நிலத்தை மூட வேண்டும் என நிசாம் காரியப்பர் விடுத்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கோட்டாபய ராஜபக்ஷ இதற்கு தேவையான முழு அனுமதியை வழங்குவதற்கு நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
இச்சந்திப்பில் மேல் மாகாண அமைச்சர் உதய கம்பன்பில மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment