கல்முனை பாதுகாப்புக்கு பொலிசாரே பொறுப்பு , இராணுவத்தை அகற்ற முடிவு

 பிரதி பொலிஸ்மா அதிபர் 
கிறீஸ் மனிதன், மர்ம மனிதன் தொடர்பாக கல்முனை மாநகர சபை பிரிவின் கல்முனை (தமிழ் பிரிவு), சாய்ந்தமருது, கல்முனை (முஸ்லிம் பிரிவு), ஆகிய பிரதேச செயலகப் பிரிவின் கீழுள்ள விழிப்புணர்வு குழு அங்கத்தவர்கள், கிராம உத்தியோகத்தர்கள், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் சமூகத் தலைவர்கள் ஆகியோர்களுக்கு விழிப்பூட்டும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டம் இன்று கல்முனை (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் பி.பியசேன, கிழக்கு மாகாண அமைச்சர் ரி.நவரெட்ணராஜா, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் திலக் விஜயகுணவர்த்தன, அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ரணகல, உதவி பொலிஸ் அத்தியட்சகர் மெண்டிஸ், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரான்பெரேரா, கல்முனை பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு புலனாய்வு பொறுப்பதிகாரி எஸ்.எம்.சதாத், அனைத்து பள்ளிவாசல்கள் மற்றும் பொது நிறுவனங்களின் தலைவர் டாக்டர் எஸ்.எம்.ஏ.அஸீஸ், கல்முனை (முஸ்லிம் பிரிவு) பிரதேச செயலாளர் எம்.எம்.நௌபல், சாய்ந்தமருது உதவி பிரதேச செயலாளர் எம்.ஐ.எம்.தௌபீக் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

இப்பிரதேசத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள இராணுவம் உடனடியாக அகற்றப்பட வேண்டும், பொலிஸாரும், விஷேட அதிரடிப்படையினரும் ரோந்து மற்றும் பாதுகாப்பு கடமைகளில் ஈடுபடுத்தப்பட வேண்டும் எனவும் 30 வருட காலம் நிலவிய பயங்கரவாதத்தை ஒழித்துக்கட்டிய இந்த அரசிற்கு கிறீஸ் மனிதன், மர்ம மனிதன் என்பவர்களை ஏன் பிடிக்க முடியாது இது விடயத்தில் அரசே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் எனவும் கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் உரத்த தொனியில் ஆவேசத்துடன் தெரிவித்தனர்.

இதனையடுத்து இன்றிலிருந்து இராணுவம் அகற்றப்பட்டு விஷேட அதிரடிப்படையினரும், பொலிஸாரும், சிவில் பாதுபாப்பு குழு அங்கத்தவர்களும் பாதுகாப்பு கடமையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக பிரதி பொலிஸ் மா அதிபர் அங்கு தெரிவித்ததையடுத்து அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சந்தோசத்துடன் கலைந்து சென்றனர்.

Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்