ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க முஸ்லிம் அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்?



முஸ்லிம்களின் பிரச்சனைகள் தொடர்பில் ஆணைக்குழு முன் சாட்சியமளிக்க அரசியல் தலைமைகள் தயங்குவது ஏன்? 2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் மாதம் வரையிலான காலப்பகுதியில் நடைபெற்ற சம்பவங்களை விசாரணை செய்து அறிக்கை சமர்ப்பிப்பதற்கென ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, கற்றுக் கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு ஒன்றினை நியமித்துள்ளார்.
இவ்வாணைக்குழு நாட்டின் பல பாகங்களுக்கும் நேரடியாக சென்று விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது. இவ்வாணைக் குழுவின் விசாரணைக்காக விதிக்கப்பட்டுள்ள கால எல்லையினை கருத்திற் கொண்டு முஸ்லிம் காங்கிரஸ் அதிருப்தியை வெளியிட்டதுடன் அதன் முன் சாட்சியமளிப்பதுமில்லை எனவும் அறிவித்தது விரிவாக பார்க்க
இதேவேளை மற்றைய முஸ்லிம் கட்சிகள் இவ்வாணைக்குழு பற்றி எந்தவொரு சாதக பாதகக் கருத்துக்களையும் வெளியிடவில்லை. 2002ஆம் ஆண்டு முதல் 2009 ஜூன் என்ற கால எல்லை இலங்கையின் அரசியல் பிணக்குகளின் வரலாற்றில் மிகக் குறுகியதொன்றாகும். அதன் அடிப்படையில் முஸ்லிம் காங்கிரஸின் அதிருப்தியானது நியாயமானதாகும்.
1990ஆம் ஆண்டு காலப்பகுதியில் முஸ்லிம்கள் என்றுமில்லாத அளவிற்கு நெருக்கடிகளை அனுபவித்தார்கள். உயிர்களையும், உடமைகளையும் இழந்து அகதி முகாம்களில் அடைக்கலம் தேடினார்கள் என்ற போதிலும் கற்றுக் கொண்ட பாடங்களும் அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு விடயத்தில் முஸ்லிம் அரசியற் தலைமைகளும், அரசியற் கட்சிகளும், அமைப்புக்களும் மேலதிக கவனத்தைச் செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் முஸ்லிம் சமூகத்தின் நலன்விரும்பிகளால் முன்வைக்கப்படுகின்றன.
ஆணைக்குழுவானது குறிப்பிட்ட கால எல்லைக்குள் நடைபெற்ற சம்பவங்களை மட்டும் தான் விசாரணை செய்யும், அவற்றையே ஆவணமாக வாங்கிக் கொள்ளும் என்ற எண்ணப்பாடு முஸ்லிம்களிடம் காணப்பட்ட போதிலும் இந்த ஆணைக்குழுவானது 2002ஆம் ஆண்டிற்கு முதலுள்ள விடயங்களையும் சாட்சியமளிப்பவர்களிடம் இருந்து கேட்டுக் கொண்டிருக்கின்றது.
அது மட்டுமல்லாது ஆணைக்குழுவினரும் 2002ஆம் ஆண்டிற்கு முதல் இடம்பெற்ற சம்பவங்களையும் கேட்டு அறிந்து கொள்கின்றனர். உதாரணத்துக்கு கிழக்கு மாகாண முதல் அமைச்சரிடம் 1990ஆம் ஆண்டு பொலிஸார் நிராயுதபாணியாக்கப்பட்டு விடுதலைப் புலிகளினால் கொல்லப்பட்டதற்கு மன்னிப்பு கேட்பீர்களா என்ற கருத்தில் கேள்வி கேட்டதனை கூறலாம்.
ஆதலால், முஸ்லிம் அரசியற் கட்சிகளும் அமைப்புக்களும், அரசியற் தலைமைகளும் ஆணைக்குழுவின் முன்னால் சாட்சியமளித்தல் வேண்டும். இவ்வாணைக்குழுவின் முன் முஸ்லிம்களின் பிரச்சினைகள் முறையாக முன்வைக்கப்படவில்லை. முன்னாள் அமைச்சர் பேரியல் அஷ்ரப், எம்.ஐ.எம். கைதீன், யாகிட் யூசுப் (சவூதிக்கான இலங்கை முன்னாள் தூதுவர், கொழும்பு சாஹிரா கல்லூரியின் முன்னாள் அதிபர்) சுபியான் மௌலவி, கலாநிதி பர்ஸானா ஹனீபா போன்ற ஒரு சிலரே ஆணைக்கு குழுவின் முன் சாட்சியமளித்துள்ளார்கள். இவர்களின் சாட்சியங்கள் முஸ்லிம்களின் முழுமையன பிரச்சினைகளை பிரதிபலிப்பதற்கு போதுமானவையல்ல.
ஆயினும் இவர்களின் சாட்சியங்கள் முஸ்லிம்களுக்கும் பிரச்சினைகளுண்டு என்பதனை ஆணைக்குழுவினருக்கு விளங்க வைத்துள்ளன. 2002ஆம் ஆண்டின் பின்னரும் முஸ்லிம்கள் நாட்டின் பல இடங்களில் ஆயுததாரிகளினாலும் சீருடையினராலும் தாக்கப்பட்டுள்ளார்கள். கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.
மூதூலிருந்து முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டமை, அதன் போது உயிர் இழப்புக்கள் ஏற்பட்டமை, பொத்துவில் இறத்தல் குளத்திற்கு அருகில் 10 முஸ்லிம்கள் படுகொலை செய்யப்பட்டமை, வாழைச்சேனையில் ஏற்படுத்தப்பட்ட மோதல்களின் போது முஸ்லிம்களின் சொத்துக்களும், உயிர்களும் இழக்கப்பட்டமை, அக்கரைப்பற்று வட்டமடு வயற் பகுதியில் முஸ்லிம்கள் கொல்லப்பட்டமை, கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம்களின் பூர்வீகக்காணிகள் திட்டமிட்டப்படி பறிமுதல் செய்யப்பட்டமை என 2002ஆம் ஆண்டின் பின்னர் முஸ்லிம்கள் எதிர்கொண்ட நெருக்கடிகளை அடிக்கிக் கொண்டே போகலாம்.
இவ்வளவு பிரச்சினைகளை முஸ்லிம்கள் 2002ஆம் ஆண்டிலிருந்து அனுபவித்துள்ளார்கள். இவற்றையெல்லாம் பற்றிக் கற்றுக்கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் முன் எடுத்துக் கூற முடியும். இதனைச் செய்வதற்கு முஸ்லிம்களிடம் காணப்படும் அரசியற் கட்சிகளும், அமைப்புக்களும் முயற்சிகளை எடுக்காது இருக்கின்றன.
பிசாசுகளின் கூட்டம் நடைபெற்றாலும் அங்கும் முஸ்லிம் காங்கிரஸின் பிரதிநிதி இருக்க வேண்டுமென்று மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரப் கூறி இருந்தார். இக் கூற்றை ஏற்றுக் கொண்டவர்கள்தான் இன்றுள்ள முஸ்லிம் காங்கிரஸ், தேசிய காங்கிரஸ், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் ஆகியவற்றின் முக்கியஸ்தர்கள். எனினும் இக் கட்சிகளின் சார்பாக எவரும் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கவில்லை. ஏன்?
மேடைகளில் முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள அக்கறையை வாய் கிழிய கத்துவதனால் முஸ்லிம் சமூகம் தலை நிமிர்ந்து விடாது. அவர்களின் பிரச்சினைகளை உரிய இடத்தில் தெரிவிக்க வேண்டும்.
அத்தகையதொரு சந்தர்ப்பம் கற்றுக் கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் மூலமாக கிடைக்கப் பெற்றிருக்கும் வேளையில் முஸ்லிம்களின் வாக்குகளினால் தெரிவான அரசியற் தலைமைகளும், மற்றவர்களும் அதனைப் பயன்படுத்திக் கொள்ளாமல் இருப்பது எதற்காக? இதுதான் அவர்களின் முஸ்லிம் சமூகத்தின் மீதுள்ள பற்றுதலாகும் என்று எண்ண வேண்டியுள்ளது.
ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிக்கும் போது சரியான புள்ளி விவரங்களின் அடிப்படையில் கருத்துக்களை முன்வைத்தல் வேண்டும். இது மிகவும் கடினமான பணியாகும். இந்த கடின பணிக்கு எந்தவொரு முஸ்லிம் அரசியல் தலைமைகளும் அவர்கள் சார்ந்த கட்சிகளும் தயாரற்றவையாக உள்ளன.
முஸ்லிம்களைப் பற்றிய சரியானதொரு புள்ளிவிவரங்கள் இல்லாத நிலையில் இக் கட்சிகள் இருப்பதனால்தான் ஆணைக்குழுவின் முன் சாட்சியமளிப்பதற்கு தயங்குகின்றன. இதேவேளை, ஆணைக்குழுவினர் முஸ்லிம் அரசியற் தலைவர் ஒருவருக்குச் சாட்சிய மளிக்கும்படி அழைப்பு விடுத்ததாகவும் அதனை அவர் நிராகரித்துவிட்டதாகவும் உறுதிப் படுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
கற்றுக் கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டாலும் தீர்வுகளை பெற்றுத்தராது. அதனால் சாட்சியமளிக்க வேண்டியதில்லை என்று கூறும் அரசியற் தலைமைகளும் உள்ளன. தீர்வு கிடைக்குமா? இல்லையா? என்பதற்கு முன்னதாக தீர்வைத் தரவேண்டுமென்பதற்காக கருத்துக்கள் முன்வைக்கப்பட வேண்டும். அதுவே சிறந்தது.
மேலும், எதனையும் பேசாது இருப்பதனால் முஸ்லிம்களுக்கு பிரச்சினைகள் இல்லையென்ற அர்த்தத்தைக் கொடுத்து விடும். அத்தோடு எதிர்பாராத விதமாக தீர்வு முன்வைக்கப்படும் பட்சத்தில் முஸ்லிம்களுக்கு தீர்வு கிட்டாது போகலாம். அதற்கான காரணமாக முஸ்லிம்கள் தமது பிரச்சினைகள் பற்றி ஆணைக்குழுவிடம் கூறவில்லை. ஆதலால் அவர்களுக்கு பிரச்சினைகளுமில்லை என முஸ்லிம்களை புறக்கணிக்கவும் செய்யலாம். இத்தகைய கைங்கரியத்தினை செய்த பெருமை முஸ்லிம் அரசியற் தலைமைகளையே வந்து சேரும் என்பதையும் கவனிக்க வேண்டும்.
இதேவேளை பள்ளிவாசல்களின் தலைமைகள், உலமா சபைகளின் தலைமைகள் போன்ற சமூகத்தின் மத்தியில் மிக்க மதிப்புடைய அமைப்புக்களின் தலைமைகளும் முஸ்லிம்கள் மீது கரிசனை கொள்ளும் நிலை ஏற்பட வேண்டும். இவைகளும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை எடுத்துக் கூறுவதற்கு ஆணைக்குழுவின் முன்னால் தோன்ற வேண்டும். இவ் அமைப்புக்கள் சீராக்கப்பட வேண்டும். அரசி யல்வாதிகளை வழிப்படுத்துபவர்களாக திகழ வேண்டும்.
முஸ்லிம் அரசியல் தலைமைகளும், கட்சிகளும், அமைப்புக்களும் கற்றுக் கொண்ட பாடங்களும், அனுபவங்களும் தொடர்பான தேசிய நல்லிணக்க ஆணைக்குழுவின் ன் முஸ்லிம் பிரச்சினைகளை எடுத்துக் கூற முன் வருதல் வேண்டும்.
இதன் விசாரணைக் காலம் இன்னும் ஆறுமாத காலத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் காலங்களில் அம்பாறை, திருமலை மாவட்டங்களுக்கும் இவ்வாணைக்குழு வருகை தரவுள்ளது.
ஆதலால், நடந்தவைகள் போக நடக்க இருப்பவைகள் நல்லதாக நடக்க வேண்டும். அதற்கான திட்டங்களை முஸ்லிம்கள் வகுக்க வேண்டும். காத்திரமான அமைப்புக்கள் உள்ள சமூகத்தில்தான் நல்லவைகள் நடைபெறும் என்பதனை முஸ்லிம்களின் சிந்தனைகளுக்கு விடுகின்றோம்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது