ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அரசுக்குமிடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது.
ரவூப் ஹக்கீம்
இலங்கை அரசியலில் 40 வருடகால அனுபவம் கொண்டவர் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ.இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸிற்கும் அரசுக்குமிடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளதாக அக்கட்சியின் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.
நெக்டெப் திட்டத்தின் அனுசரணையுடன் நிர்மாணிக்கப்பட்ட கல்முனை பொதுச்சந்தைக்கட்டிடத் திறப்பு விழா நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை மாலை பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் கலந்து கொண்ட ரவூப் ஹக்கீம் தொடர்ந்து உரையாற்றுகையில் கூறியதாவது;
தமிழ்த்தேசிய கூட்டமைப்பை பேச்சுக்கழைத்து தனியாக பேசத்தெரிந்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸையும் சந்தித்து பேசவேண்டுமென்று யாரும் சொல்லிக்கொடுக்கும் அளவுக்கு அவர் அரசியல் ஞானம் அற்றவரல்ல.
எமது கட்சிக்கும் ஜனாதிபதியுடன் பேசுவதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இருந்தும் உங்களை சந்திக்கவேண்டுமென்பதற்காகவே நான் அவ்வழைப்பின்படி அவரைச் சந்திக்கமுடியவில்லை.
ஆனால், அவரைச் சந்திக்கவில்லையென்பதற்காக அவர் எம்மை தவறாகப் புரிந்து கொள்ளாதளவிற்கு இன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கும் அவருக்குமிடையில் நல்லுறவு ஏற்பட்டுள்ளது.
இலங்கை அரசியலில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ சாமானியமானவரல்ல. 70 ஆம் ஆண்டு காலப்பகுதியிலிருந்து 40 வருட கால அரசியல் அனுபவம் உள்ளவர்.
மறுமுனையில் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அரசியல் முதிர்ச்சியின் காரணமாக இன்றும் ஐக்கிய தேசியக்கட்சியின் தலைமைப்பதவியைத் தக்கவைத்துக் கொண்டு செல்கின்றார்.இவற்றிற்கு மத்தியில் நாம் எமது அரசியல் நகர்வுகளை கவனமாக நகர்த்தி வருகின்றோம்.
எமது இனத்தின் உரிமைகளை அடகு வைத்துவிட்டு அரசில் சங்கமிக்க நாம் ஒருபோதும் தயாரில்லை.அதற்காக எதிர்க்கட்சியில் தொடர்ந்தும் இருக்கவேண்டிய கடமைப்பாடும் இல்லை.மறைந்த தலைவர் அஷ்ரப் 6 வருடங்கள் ஆளுங்கட்சியிலும் 6 வருடங்கள் எதிர்க்கட்சியிலும் இருந்தும் அரசியலை முன்னெடுத்துச் சென்று நமக்கு படிப்பினையைத் தந்துள்ளார்.
எமது எம்.பி.க்கள் 8 பேரும் மிகவும் கட்டுக்கோப்புடன் செயற்பட்டு வருகின்றனர்.இனி கட்சி பிளவுபடாது என்ற நம்பிக்கை எனக்குண்டு.உங்களுக்கு நல்ல எதிர்காலம் மிக விரைவில் பிறக்கும் என்று நான் நம்புகின்றேன்.முஸ்லிம்களின் தலைநகரமான கல்முனையை அபிவிருத்தி செய்வதில் முதலியார், எம்.எஸ்.காரியப்பர்,எம்.சி.அகமட் .ஆர்.மன்சூர் ஆகியோரின் சேவைகளை நாம் மறந்து விடமுடியாது.
இன்று கல்வியின் சின்னமான கல்முனை ஸாஹிரா தேசிய பாடசாலை மற்றும் மஹ்மூத் கல்லூரி என்பன மேலும் அபிவிருத்தி செய்யப்படவேண்டும்.ஒலுவில் துறைமுகம் தென்கிழக்குப்பல்கலைக்கழகம் போன்ற பாரிய அபிவிருத்தித் திட்டங்கள் எதிர்காலத்தில் முன்னெடுக்கப்படவேண்டிய அவசியத்தையும் நாம் மறக்கக்கூடாது. கடல்கோளின் போது பாரிய அழிவுகளை எதிர்கொண்ட கல்முனையில் இன்னும் மக்கள் வீடுகளை முற்றாக பெறவில்லையென்பது வேதனைக்குரியது.
எதிர்காலத்தில் கட்சியை அடிமட்டத்திலிருந்து மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும். இதற்காக சகலரும் பாடுபடவேண்டும். தேர்தல் முறையில் மாற்றங்கள் கொண்டுவரப்படுகின்றபோது சமூகத்தின் இருப்பை நாம் பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
இங்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.எம்.அஸ்லம்,கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஏ.எம்.ஜெமீல்,கல்முனை முதல்வர் மசூர்மௌலானா, கட்சியின் பிரதித்தலைவர் முழக்கம் மஜீட், பிரதி முதல்வர் பஷீர் உட்பட மாநகரசபை உறுப்பினர்கள் கல்முனை முகைதீன் ஜும் ஆப்பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட முக்கியஸ்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment