ஹரிஸ் எம்.பி அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வை த.தே.கூ பகிஷ்கரிப்பு
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.என்.ஹரிஸ் அதிதியாக கலந்து கொண்ட நிகழ்வை கல்முனை மாநகரசபையின் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர்கள் பகிஷ்கரித்தனர்.
கல்முனை மாநகரசபையின் புதிய மேயர் மசூர் மௌலானாவை கௌரவிக்கும் நிகழ்வும் கல்முனைக்குடி பகுதியில் சந்தைக்கட்டிடமொன்று திறக்கும் நிகழ்வும் நேற்று இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரும் கல்முனை மாநகரசபையின் முன்னாள் மேயருமான எச்.எம்.என்.ஹரிஸ் ஆகியோர் அதிதிகளாக கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்துகொள்ளவில்லை.
இது தொடர்பாக கல்முனை மாநகரசபையின் எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினருமான ஹென்றி மகேந்திரன் இவ்வாறு கருத்துக் கூறினார்.
"வடக்கு-கிழக்கு மாகாணங்களை இணைக்கக் கோரும் உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்று கூறும் அருகதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.என்.ஹரிஸூக்கு இல்லை.
கடந்த 9ஆம் திகதி நாடாளுமன்றத்தில் ஹரிஸ் வடக்கு கிழக்கை இணைக்கக் கோரும் உரிமை தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு இல்லை என்றும் வடக்கு கிழக்கை இணைப்பதை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எதிர்க்கும் என்றும் கூறியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன்.
அவரின் கட்சிக் கொள்கையை அவர் தெரிவிக்கலாம். ஆனால் எமது கட்சிக்கு உரிமை இல்லை என்று கூறியதை நான் வன்மையாக கண்டிக்கின்றேன். அப்படிக் கூற அவருக்கு எந்தவித அருகதையும் இல்லை.
கல்முனை மாநகரசபையின் மேயருக்கு கௌரவம் வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதற்கு எங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால் ஹரிஸ் அதிதியாக வருகை தந்ததால் அவரின் கருத்தை ஆட்சேபித்து இந்த நிகழ்வையும் நாங்கள் பகிஷ்கரிக்க முடிவு செய்தோம் என்றார்.”
Comments
Post a Comment