கல்முனை நீதிமன்றில் 12 வயது சிறுமி பெற்றோருக்கு எதிராக வழக்கு
பெற்றோருடன்
சேர்ந்து வாழ முடியாது என்று தெரிவித்து 12 வயதுடைய முஸ்லிம் சிறுமி
ஒருவர் கல்முனை நீதிவான் நீதிமன்றத்தில் இன்று வாக்குமூலம் வழங்கினார்.
பெற்றோர் அடித்துச் சித்திரவதை செய்கின்றனர் என்றும், பாடசாலைக்கு அனுப்பாமல் வீட்டில் வைத்திருந்து எந்த நேரமும் வேலை வாங்குகின்றனர் என்றும் அவர் அவ்வாக்குமூலத்தில் தெரிவித்தார்.
அந்த நேரம் சிறுமியின் பெற்றோரும் நீதிமன்றத்தில் ஆஜராகி இருந்தனர். இவ்வழக்கு கல்முனை நீதவான் முஹமட் ரிஸ்வி முன்னிலையில் இடம்பெற்றது.
சிறுமியை ஆதரித்து நோர்வே அகதிகள் கவுன்சிலின் சட்ட ஆலோசகர்களான சட்டத்தரணி ஆரிக்கா காரியப்பர். சட்டத்தரணி பிறேம் நஸீர் ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
பெற்றோரின் சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணிகளான ஏ.எம்.பதுறுதீன்இ எப்.எம்.ஏ.அன்ஸார் மௌலானா ஆகியோர் ஆஜராகி வாதாடினர்.
சிரேஷ்ட சட்டத்தரணி அன்ஸார் மௌலானா அவருடைய வாதத்தில் சிறுமியின் உரிமைகள் நிச்சயம் பாதுகாக்கப்படத்தான் வேண்டும். ஆனால் குடும்ப அலகையும் பாதுகாக்க வேண்டியது நீதிமன்றத்தின் கடமையாகும்.
சிறுமி ஒழுக்கத்துக்குப் புறம்பான சில செயல்களைச் செய்தார். ஆகவே தான் பெற்றோர் அவரைக் கண்டித்தனர்.நீதிமன்றம் பெற்றோருக்கு சந்தர்ப்பம் ஒன்றை வழங்க வேண்டும்.அவருடன் சிறுமியை அனுப்பி வைக்க வேண்டும் என்று முன்வைத்தார்.
சிறுமியின் வாக்குமூலம், பெற்றோர் தரப்பு நியாயம் ஆகியவற்றைக் கவனமாகச் செவிமடுத்த நீதவான் குறித்த பெற்றோரைக் கடுமையாக எச்சரித்தார்.சிறுமியை எந்த விதத்திலும் துன்புறுத்தவோ , புண்படுத்தவோ கூடாது என்று அவர்களுக்கு உத்தரவிட்டார்.
அவர் சிறுமிக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறி அடுத்த வாரம் வரை பெற்றோருடன் தங்கியிருந்து பார்க்கும்படி ஆலோசனை கூறினார்.
பெற்றோர் அவரை துன்புறுத்துகின்றனரா ?என்பதை பொலிஸாரும், குடும்ப நல உத்தியோகத்தர்கள் அக்காலப்பகுதியில் நாளாந்தம் வீட்டுக்கு வந்து அவதானிப்பார்கள் என்றும் அவர் சிறுமிக்கு வாக்குறுதி வழங்கினார்.
அதையடுத்து அடுத்த ஒரு வாரம் வரைக்கும் பெற்றோருடன் இருந்து பார்க்க இணங்கினார். சிறுமி
பெற்றோருடன் அனுப்பி வைக்கப்பட்டார். இச்சிறுமி மருதமுனையைச் சேர்ந்தவர் ஆவார்.
இவரின்
தந்தை கூலி வேலை செய்கின்றார். இப்பெற்றோருக்கு இன்னுமொரு கைக்குழந்தை உள்ளது. இந்நிலையில் பிரஸ்தாப சிறுமி கல்முனையில் உள்ள குடும்ப நல அதிகாரசபை அலுவலகத்துக்குச் சென்று பெற்றோர் அவரை இவ்வாறெல்லாம் துன்புறுத்துகின்றனர் என்று முறைப்பாடு ஒன்றை மேற்கொண்டிருந்தார்.
சிறுவர்
பாதுகாப்பு அதிகாரிகள் சிறுமியையும் பெற்றோரையும் சேர்த்து வைக்க பகீரத முயற்சிகளை மேற்கொண்டனர். ஆனால் அவை தோல்வியில் முடிந்தன. இந்நிலையில் சிறுவர் பாதுகாப்பு அதிகாரிகள் முறைப்பாடு ஒன்றை சிறுமியின் சார்பில் கல்முனைப் பொலிஸ் நிலையத்தில் மேற்கொண்டனர்.
இதையடுத்து கல்முனைப் பொலிஸ் நிலையத்தின் சிறுவர் மற்றும் பெண்கள் பாதுகாப்புப் பிரிவுப் பொலிஸார் குறித்த பெற்றோருக்கு எதிராக இவ்வழக்கைத் தாக்கல் செய்திருந்தனர்.
இவ்வழக்கு இடம்பெற்றபோது நீதிமன்றம் மிகவும் பரபரப்பாகக் காணப்பட்டது.
Comments
Post a Comment