கிழக்கில் ஆறு வேலைத் திட்டங்களை மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
மாகாண அமைச்சரவை பேச்சாளர் உதுமா லெப்பை
கிழக்கு மாகாணத்தில் ஆறு வேலைத் திட்டங்களை மேற்கொள்வதற்கு கிழக்கு
மாகாண அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக கிழக்கு மாகாண அமைச்சரவைப்
பேச்சாளரும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சருமான எம். எஸ். உதுமா
லெப்பை தெரிவித்தார்.மாகாண அமைச்சின் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாடு கடந்த சனியன்று திருகோணமலையில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர் தொடர்ந்து அங்கு கருத்து தெரிவிக்கையில்
கிழக்கு மாகாணத்தில் அடிப்படை வசதிகற்ற ஆறு கிராமங்களைத் தெரிவு செய்து அவற்றை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தில் ஹுஸைனி, சின்னக்குளம், திமிரிகொள்ள ஆகிய மூன்று கிராமங்களும் மட்டக்களப்பு மாவட்டத்தில் வடமுனை, எம்.ஐ.எச். நகர் ஆகிய கிராமங்களும் திருகோணமலை மாவட்டத்தில் கங்குவேலி, கிராமமும் இதற்காகத் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
கிழக்கு மாகாணத்தில் உள்ள நீர்ப்பாசன திணைக்களத்தின் அம்பாறை, பொத்துவில், குச்சவெளி, மூதூர் ஆகிய நீர்ப்பாசன பொறியிலாளர் காரியாலயங்களுக்கு பதில் பொறியலாளர்களை நியமிப்பதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்றவற்றின் நிதியுதவியோடு வீதிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. இவ் வீதிகளை எதிர்காலத்தில் பராமரிக்க 2011 ஆம் ஆண்டிலிருந்து கிழக்கு மாகாணத்தில் வாகன அனுமதிப் பத்திரத்துக்காக அறவிடப்படும் நிதியிலிருந்து கணிசமான தொகைப் பணத்தை வீதி அபிவிருத்தி திணைக்களத்துக்கு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
கிழக்கு மாகாணத்தில் ஆயுர்வேத வைத்தியத்துறையை அபிவிருத்தி செய்யவும் தேவையான மருந்துகளை உற்பத்தி செய்யவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. உல்லாசப் பயணிகளை மையமாக வைத்து பாசிக்குடா, நிலாவெளி, அறுகம்பை போன்ற இடங்களை அண்மித்த பிரதேசங்களில் ஆயுர்வேத பஞ்சகர்ம போன்ற முறைகளைப் பயன்படுத்தி வைத்திய முறைகளை ஆரம்பிப்பதற்காக ஆயுர்வேத வைத்தியசாலைகள் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
Comments
Post a Comment