கலப்பு தேர்தல் முறையை மாற்ற முயற்சிப்போர் ஜனநாயக துரோகிகள்
தொகுதிவாரி முறையையும் உள்ளடக்கிய கலப்பு முறையான தேர்தல் முறையை மாற்ற முயற்சிப்பவர்கள் ஜனநாயக துரோகிகளாவார்கள் என மாகாண சபைகள், உள்ளூராட்சி மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் பைசர் முஸ்தபா குற்றஞ்சாட்டினார்.
தேர்தல் முறையை இனவாதக் கோணத்தில் பார்க்க வேண்டாம் என்றும் அவர் கோரிக்கை விடுத்தார். மாகாணசபைகளின் தேர்தல் தொகுதி எல்லைகளை நிர்ணயிப்பதற்கான குழுவின் அறிக்கை மீதான விவாதத்தை ஆரம்பித்து உரையாற்றும் போதே அமைச்சர் பைசர் முஸ்தபா இதனைத் தெரிவித்தார். கலப்பு முறையினால் இனத்துக்கான பிரதிநிதித்துவம் கிடைக்காது என சில கட்சிகள் கூறினாலும், கட்சிக்கான பங்கு கிடைக்கவில்லையென்பதே அவர்களின் முக்கிய கவலையாகும். இவ்வாறான கட்சிகள் தேசிய கட்சிகளைப் பிடித்துத் தொங்குவதற்கு முயற்சிப்பதாகவும் அமைச்சர் குற்றஞ்சாட்டினார்.
விருப்புவாக்குமுறை மோசடி நிறைந்த முறை என்பதாலேயே ஜனநாயகத்தை நிலைநாட்ட தொகுதிவாரி முறையையும் உள்ளடக்கிய கலப்புமுறையை கொண்டுவந்தோம்.
சில கட்சிகள் இனவாதக் கோணத்தில் இதனைப் பார்க்கின்றன. நாடு ஏற்கனவே பாரிய இன முரண்பாட்டுக்கு முகங்கொடுத்திருப்பதால் மீண்டும் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம் எனக் கேட்டுக் கொள்வதாகவும் கூறினார். கடந்த அரசாங்கத்தின் காலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கு கலப்புமுறையை கொண்டுவந்தபோது அதனை பாராட்டி உரையாற்றியவர்கள் தற்பொழுது அந்த முறைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றனர். விருப்பு வாக்குமுறையினால் கடந்த காலங்களில் கட்சிகளுக்குள் மோதல் ஏற்பட்டன.
இந்த முறை தொடர்ந்தும் இருந்தால் கல்விமான்கள் மாகாண சபைகளுக்குத் தெரிவுசெய்யப்பட முடியாது
எல்லை நிர்ணய குழுவினை அமைச்சர் என்ற ரீதியில் நான் அமைக்கவில்லை. இந்தக் குழுவில் அழுத்தம் செலுத்த எனக்கு அதிகாரம் இல்லை. அது மாத்திரமன்றி இந்தக் குழுவின் அறிக்கை என்னுடைய சொந்த அறிக்கை அல்ல. சட்டமொன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு மாதகாலத்துக்குள் நிறைவேற்றப்படாவிட்டால் அதன் உள்ளடக்கங்களில் மாற்றம் ஏற்படாது என்றார்.
Comments
Post a Comment