கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் கல்வி மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு தீர்மானங்கள்


(அகமட் எஸ். முகைடீன்)

கல்முனை பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்  விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரும் கல்முனைத் தொகுதி ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் தலைமையில் கல்முனை பிரதேச செயலகத்தில் இன்று (30) திங்கட்கிழமை நடைபெற்றது. 


கிழக்கு மாகாண சபை உறுப்பினர் கே.எம். அப்துல் றசாக்,  பிரதேச செயலாளர் எம்.எச். கனி, கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல் ஜலீல் ,உதவி திட்டமிடல் பணிப்பாளர் கே. இராஜதுரை உள்ளிட்ட திணைக்களங்களின் தலைவர்கள் மற்றும் அதிகாரிகள்,சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.


இதன்போது கல்முனை கரையோர பிரதேசத்தில் காணப்படும் சுனாமியால் பாதிப்புக்குள்ளான கட்டட இடிபாடுகளை அகற்றி அப்பிரதேசத்தை அழகுபடுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டது. 

 நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சர்   றவூப் ஹக்கீமினால் கல்முனை மாநகர பிரதேசத்தின் திறந்தவெளி கரையோரத்தை அழகுபடுத்துவதற்கான வரைபடத்தை அமைப்பதற்கான பணிப்புரை நகர அபிவிருத்தி அதிகாரசபைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேற்படி கரையோர பிரதேசத்தை அழகுபடுத்தும் வேலைத்திட்டம் தொடர்பில் மீன்பிடி திணைக்களம், பிரதேச செயலகம், கரையோர பாதுகாப்பு திணைக்களம், கல்முனை மாநகர சபை ஆகிய திணைக்களங்கள் மீனவ சங்கங்களுடன் கலந்துரையாடி        மீன்வாடிகளை குறித்த ஒரு பிரதேசத்தில் அமைக்க தீர்மானங்களை மேற்கொண்டு நடைமுறைப்படுத்துவதாக தீர்மானிக்கப்பட்டது. 

அத்தோடு கரையோரப் பிரதேசத்தில் காணப்படும் பாவனைக்கு உதவாத வள்ளங்களில் நுளம்புப் பெருக்கம் ஏற்படும் அபாய நிலை காணப்படுவதனால் அவற்றை உடனடியாக அகற்றுவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கல்முனை மாநகர சபைக்கான புதிய கட்டடம் அமைத்தல் தொடர்பாக இதன்போது கலந்துரையாடப்பட்டது. விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் ஹரீஸ் மேற்படி விடயம் தொடர்பில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுடன் கலந்துரையாடியமைக்கு அமைவாக மாநகர கட்டடம் அமைப்பதற்கு பகுதி பகுதியாக நிதியினை ஒதுக்கித் தருவதற்கு குறித்த அமைச்சர் இணக்கம் தெரிவித்த நிலையில் நகர திட்டமிடல் அமைச்சின் நிதி ஒதுக்கீடுகளையும் பெற்றுக் கொள்ளும்வகையில் மேற்படி விடயம் கலந்துரையாடப்பட்டது.

அந்தவகையில் கல்முனை மாநகர சபை நிர்வாக பிரிவுகள், சபா மண்டபம், கேட்போர் கூடம், முதல்வர் அலுவலகம், வாகனத் தரிப்பிடம் என்பன உள்ளடங்கலாக 6 தளங்களை கொண்டதாக அமைப்பதற்கான வடிவமைப்பை மேற்கொள்வதற்கு கட்டடகலை வடிவமைப்பாளர்களின் உதவியினை மாநகர சபையின் விலைமனுக்கோரல் மூலம் பெற்றுக்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது. 

அண்மைக்காலத்தில் வெளிவந்த பெறுபேறுகளின் அடிப்படையில் கல்முனை முஸ்லிம் கோட்டப் பிரிவின் கல்வி நடவடிக்கைகள் சிறப்பாக அமைந்துள்ளதை அறியக்கூடியதாக உள்ளது. இருந்தபோதிலும் இக்கோட்டத்தின் கல்வி வளர்ச்சியை மேலும் அதிகரிக்கும் வகையில் கல்வி மேன்பாட்டுக்கான செயலணியை அமைப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது. 

அதற்கேற்ப கல்முனை, மருதமுனை, நற்பிட்டிமுனை, இஸ்லாமபாத் ஆகிய பிரதேசங்களுக்கு தனித் தனியான கல்வி மேம்பாட்டுக்கான செயலணியை பாடசாலை அதிபர்கள், பள்ளிவாசல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், கல்விமான்களை உள்ளடக்கியதாக அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.




Comments

Popular posts from this blog

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது

கரடியனாறு பாரிய வெடி விபத்தில் 62 கும் அதிகமானவர்கள் உயிரிழந்துள்ளனர்