காலத்திற்கேற்ற நவீன அரசியல் யாப்பொன்று உருவாக்கப்படுவது அவசியமாகும்


முஸ்லிம் கவுன்சில் கருத்தரங்கில்
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன

சிறுபான்மைச் சமூகங்களது நலன்களையும் உள்வாங்கி நவீன அரசியல் யாப்பு ஒன்றை உருவாக்குவதற்கு நாம் நடவடிக்கை எடுத்து வருகின்றோம் என பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஜயம்பதி விக்கிரமரத்ன தெரிவித்தார்.
தென் ஆபிரிக்கா, கென்யா, நேபாளம், கிழக்கு டிமோர் ஆகிய நாடுகளில் பன்மைத்தன்மை பேணுதல், சமூகநீதி, சமத்துவம் போன்ற அம்சங்களை உள்ளடக்கி இந்த அரசியலமைப்புத் திட்டம் தயாரிக்கப்படும்.
முஸ்லிம் இயக்கங்களின் கட்டமைப்பான முஸ்லிம் கவுன்சில் ஒப் ஸ்ரீலங்கா ஏற்பாடு செய்திருந்த அரசியலமைப்புச் சீர்திருத்த செயற்பாடுகள் பற்றிய கருத்தரங்கில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
முஸ்லிம் கவுன்சில் தலைவர் என்.எம். அமீன் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் அவர் மேலும் கூறியதாவது,
அரசியல் யாப்பு தொடர்பாக நியமிக்கப்பட்ட ஆறு குழுக்களும் அவற்றின் அறிக்கைகளைச் சமர்ப்பித்துள்ளன. அடுத்த இரு வாரத்திற்குள் இவை மொழி  பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும்.
வழி காட்டல்குழு பிரதமர் தலைமையில் செயற்பட்டு வருகின்றது. சகல கட்சிகளதும் பிரதிநிதிகள் இதில் இடம் பெற்றுள்ளார்கள்.
தேர்தல் முறை பற்றி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டு வரப்படுகின்றன.
அரசியல் யாப்பு தொடர்பாக ஒரு வசனம் கூட இதுவரைக்கும் வகுக்கப்படவில்லை. சில சமூக ஊடகங்களால் வெளிநாட்டு உதவியுடன் அரசியல் யாப்பு தயாரிக்கப்பட்டு விட்டதாகச் செய்திகள் வெளியிடப்பட்டுள்ளன. எங்களுக்கு அரசியல் யாப்பினைத் தயாரிப்பதற்கு எந்த வெளிநாட்டு உதவியும் தேவையில்லை. உபகுழுக்களது அறிக்கையே நகலாக வெளியிடப்படும். அதன் பின் வழிகாட்டல்குழு யாப்பினைத் தயாரிக்கும். இதன் பின் பாராளுமன்றத்திலும் வெளியிலும் இது தொடர்பாக விவாதிக்க இடமளிக்கப்படும்.
உலகில் மிகச் சிறந்த அரசியல் யாப்பினைத் தயாரிக்க முடியாவிட்டாலும் உரிய சூழலுக்கு ஏற்ப
சிறந்த அரசியல் திட்டம் ஒன்றைத் தயாரிக்க வேண்டும்.
தமிழர் கூட்டமைப்பில் ஆர். சம்பந்தன் போன்ற ஒருவர் தலைவராக இருக்கும் போது இதனை நிறைவேற்ற  முடியாமல் போனால் இனி ஒரு அரசியல் யாப்பினை எங்களால் தயாரிக்க முடியமா  என்பது சந்தேகத்துக்குரியதே
மேற் கொள்ளப்படும் தேர்தல் முறையில் மாற்றங்கள் பற்றி இப்போது கலந்துரையாடப்படுகின்றது. தொகுதி மற்றும் விகிதாசார முறையிலான தேர்தல் முறையை அறிமுகப்படுத்துவது பற்றி ஆலோசிக்கப்படுகின்றது. இந்த முறையின் கீழ் கட்சிக்கும் அபேட்சகருக்கும் வாக்களிப்பதற்கு ஒருவருக்கு இரு வாக்குகள் வழங்கப்படும்.
சிறுபான்மை மற்றும் சிறு கட்சிகளது நலன்களை உள்வாங்குவதற்காக பல அங்கத்தவர் தொகுதிமுறை இழப்பீட்டு பிரதிநிதித்துவம் என்பனவும் அறிமுகப்படுத்தப்படவுள்ளன. ஜேர்மன் மற்றும் நியூசிலாந்தில் பின்பற்றும் தேர்தல் முறையை ஒத்ததாகவே இத்தேர்தல் முறை அமையும்.
பெரிய கட்சிகள் ஸ்திரமான அரசினை அமைப்பதற்கு போனஸ் முறை இருக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்து வருகிறார்கள்.
வெட்டுப்புள்ளி இருக்கக் கூடாது என்பது எனது அபிப்பிராயமாகும்.
தேர்தல் தொகுதி அகில இலங்கை ரீதியாக அமைய வேண்டுமா? மாகாண ரீதியாக அமைய வேண்டுமா? என்பது பற்றி கருத்து முரண்பாடுகள் உள்ளன. தமிழர் கூட்டமைப்பு மாகாண மட்டத்தையே விரும்புகிறது. கூடுதலானவர்கள் தேசிய விகிதாசாரத்தை விரும்புகிறார்கள்.
உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் தொடர்பாக மக்கள் விடுதலை முன்னணி சாதகமான முறையில் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றது.
அதிகாரப் பரவலாக மாகாண மட்டத்தில் அமைய வேண்டும் என்ற கருத்து முன் வைக்கப்பட்டுள்ளது.
மாகாணங்கள் இணைய வேண்டுமா? என்பது பற்றி குறிப்பிட்ட மாகாணங்களே தீர்மானம் எடுப்பதற்கு யாப்பில் வசதி செய்யப்படுதல் வேண்டும். அந்த இரு மாகாண மக்கள் இணங்கினால் மாகாணங்கள் இணைந்து செயற்படலாம்.
முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்பட வேண்டுமென தீர்மானங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக நான் கருத்துக்கள் எதனையும் கூற விரும்பவில்லை. தேசவழமை மற்றும் கண்டிய சட்டங்களிலும் மாற்றங்கள் கொண்டு வருவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காலத்திற்கேற்ற நவீன யாப்பு ஒன்று உருவாக்கப்படுவது அவசியமாகும்.
தற்போதைய அரசியல் யாப்பில் சில ஷரத்துக்களை மாற்றுவதற்கு பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்படல் வேண்டும். ஒரு கமாவை மாற்றுவதாக இருந்தாலும் பொதுசன அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்.மக்களது அங்கீகாரம் பெற்றே யாப்பு திருத்தப்படும்.

அரசியலமைப்பு விவகார ஆலோசகர் வை.எல்.எஸ். ஹமீத், முஸ்லிம் கவுன்சில் உப தலைவர் ஹில்மி அஹமட் ஆகியோரும் உரையாற்றினர். எம்.ஐ.எம். முகைதீன், அசாத் சாலி உட்பட பலர் இதில் பங்குபற்றினர்.

Comments

Popular posts from this blog

கிழக்கின் நற்பிட்டிமுனைக்கு பெருமை பெற்றார் அஜீத்

தேசிய கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக அமீர் அலி

முஸ்லிம் சமய விவகார திணைக்களம் பிராந்திய அலுவலகங்களை அமைக்கின்றது