கல்முனை தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் மாற்றம் - தடுத்து நிறுத்தினார் ரவூப் ஹக்கீம்
அம்பாறை மாவட்டத்தின் கல்முனை நகரசபைக்குட்பட்ட பகுதியில் உள்ள தரவைப்
பிள்ளையார் ஆலய வீதியின் பெயர் மாற்ற நடவடிக்கைக்கு உகந்த காலம்
இதுவெல்லவெனவும் அவ்வாறான நடவடிக்கையினை நிறுத்துமாறும் நீதியமைச்சர் ரவூப்
ஹக்கீம் கல்முனை மாநகர முதல்வருக்கு பணிப்புரை வழங்கியுள்ளார்.
கல்முனையின் நீண்டகால பாரம்பரியங்களைக் கொண்ட தரவைப் பிள்ளையார் ஆலய
வீதியின் பெயரை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச அமைப்புகள்
மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசாவின் கவனத்துக்கு
கொண்டுவந்தனர்.
இது தொடர்பில் நீதியமைச்சுக்கு நேரடியாக சென்ற பாராளுமன்ற உறுப்பினர்,
அங்கு நீதியமைச்சர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின்
பொதுச்செயலாளர் ஹசன் அலி ஆகியோரை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த கலந்துரையாடல் தொடர்பில் கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா,
கல்முனையின் தரவைப் பிள்ளையார் ஆலய வீதியின் பெயரை மாற்ற எடுக்கும் நடவடிக்கைகள் தொடர்பில் பலத்த சர்ச்சைகள் ஏற்பட்டுள்ளன.
கல்முனை மாநகர சபையின் நிகழ்ச்சி நிரலின் பிரகாரம் புதிய பெயர் மாற்றம்
என்ற சொற்பதம் மட்டுமே வழங்கப்பட்டு இது எடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில்
கல்முனை மாநகர சபையின் தமிழ் உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து
அது பிற்போடப்பட்டுளளது.
இது தொடர்பில் மாநகரசபை உறுப்பினர்கள், மாகாணசபை உறுப்பினர்கள், பொது
அமைப்புகள் என்னை தொடர்புகொண்டு, இது தொடர்பில் ஸ்ரீலங்கா முஸ்லிம்
காங்கிரஸ் தலைவரை சந்தித்து இதனை நிறுத்த நடவடிக்கையெடுக்குமாறு கோரிக்கை
விடுத்தனர்.
சென்ற வியாழக்கிழமை இது தொடர்பில் நீதியமைச்சுக்கு சென்று நீதியமைச்சர்
ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச்செயலாளர் ஹசன் அலி
ஆகியோரை சந்தித்து கலந்துரையாடினேன்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் ஹக்கீம் இந்த விடயம் தொடர்பில் மாநகர
சபையில் இந்த காலத்தில் இது ஆராய வேண்டிய தேவையில்லை. இதனை விவாதத்துக்கு
எடுக்க வேண்டாம் என்று பணிப்புரை வழங்குமாறு முஸ்லிம் காங்கிரஸின்
பொதுச்செயலாளர் ஹசன் அலியிடம் தெரிவித்தார்.
எனவே அந்த நடவடிக்கையினை நிறுத்திய அமைச்சருக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் மேலும் தெரிவித்தார்.
Comments
Post a Comment