கல்முனை மாநகர சபைக்கு நிர்வாக கட்டிடம் உள்ளிட்ட பல தேவைகளை நிவர்த்திக்க அமைச்சர் அதாவுல்லா இணக்கம்!
கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிடத்தை அமைத்துத் தருவதாக மாநகர முதல்வர் கலாநிதி சிராஸ் மீராசாஹிபிடம் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாவுல்லா இணக்கம் தெரிவித்தார்.கல்முனை மாநகர முதல்வர் தலைமையிலான குழு இன்று (17.12.2012) காலை உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சரை அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சந்தித்து கலந்துரையாடிய போதே மேற்குறித்த உறுதியினை வழங்கினார்.
கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிடமின்மை, ஆளனி பற்றாக்குறை, நிர்வாக பிரிவின் உபயோகத்திற்கான வாகனம் இன்மை, திண்மக் கழிவுகளை அகற்றுவதற்கு தேவையான உழவு இயந்திரங்கள் இன்மை, நூலகங்களை தரம் உயர்த்தல் மற்றும் உள்ளூராட்சி மன்ற வட்டார எல்லைகள் தொடர்பாகவும் முதல்வரினால் அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
இதன்போது மேற்படி விடயம் தொடர்பாக முதல்வரினால் அமைச்சரிடம் மனு ஒன்றும் கையளிக்கப்பட்டது.
மேற்குறித்த விடயங்களை நிவர்த்தி செய்து தருவதாகவும் கல்முனை மாநகர சபைக்கான நிர்வாக கட்டிட அமைவிடத்தினை நேரில் வந்து பார்வையிட்ட பின்னர் அமைத்துத் தருவதாகவும் அமைச்சர் உறுதியளித்தார்.
இக்கலந்துரையாடலில் மாநகர ஆணையாளர் ஜே.லியாகத் அலி, மாநகர சபை உறுப்பினர்களான ஏ.ஆர்.அமீர், எம்.எஸ்.உமர்அலி, ஏ.நிசார்டீன், ஏ.எம்.பரக்கத்துள்ளா, ஐ.எம்.பிர்தௌஸ், இஸட்.ஏ.எம்.றகுமான், ஏ.விஜெயரட்னம், ஆசிய மன்ற நிகழ்ச்சித் திட்ட உத்தியோகத்தர் எம்.ஐ.எம்.வலீத், அக்கரைப்பற்று மாநகர ஆணையாளர் அஸ்மி உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Comments
Post a Comment