அரச ஊழியர்களுக்கு அதிகரித்த கொடுப்பனவு ஜனவரியில்
வாழ்க்கைச் செலவு கொடுப்பனவு 750 ரூபா
2013 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரசாங்க ஊழி யர்களுக்கு அதிகரிக்கப்பட்டிருக்கும் கொடுப்பனவுகள் ஜனவரி மாதம் முதல் வழங்கப்படவுள்ளன.
அரசாங்க ஊழியர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆகக் குறைந்தது 1500 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளது. வரவுசெலவுத் திட்டத்தை நேற்றுமுன்தினம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து உரையாற் றிய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இதனை அறிவித்தார்.
அனைத்து அரசாங்க ஊழியர்களுக்கும் ஜனவரி மாதத்திலிருந்து மாதமொன்றுக்கு வாழ்க்கைச் செலவுக் கொடுப்பனவாக 750 ரூபா வழங்கப்படவிருப்பதுடன், மீதித்தொகையானது அடிப்படைச் சம்பளத்தின் 5 வீதமாக அதாவது, ஆகக் குறைந்தது 750 ரூபாவாக, 2500 ரூபாவுக்கு அதிகரிக்காத வகையில் விசேட கொடுப்பனவாக வழங்கப்படும் என அவர் குறிப்பிட்டார்.
அதிகரிப்புகளினால் ஏற்படும் பணவீக்க அழுத்தத்தினைக் கவனத்திற்குகொண்டு முன்மொழியப்பட்ட 5 சதவீத அதிகரிப்பில் 50 சதவீதத்தினை 2013ஆம் ஆண்டு மே மாதத்திலிருந்து, மீதியை செப்டெம்பர் மாதத்திலிருந்து வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய அனைத்து பதவிநிலை அலுவலர்களும் 50 சதவீதத்தினை 2013 ஆம் ஆண்டு யூலையிலிருந்தும் மீதியை ஒக்டோபரிலிருந்தும் பெற்றுக்கொள் வார்கள் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தொடர்ந்தும் உரையாற்றிய ஜனாதிபதி, தற்போது 13 இலட்சம் அரசாங்க ஊழியர்கள் பணியாற்றுகின்றனர். 2005 ஆம் ஆண்டில் இருந்ததைவிட இது இரண்டு மடங்காகும்.
இவ்வாறு பெரும் எண்ணிக்கையானவர் களை சேவையில் ஈடுபடுத்தியிருப்பதால் இவர்களின் சம்பளங்களுக்காக மாத்திரம் 366 பில்லியன் ரூபா செலவிடப்படுகிறது.
அது மாத்திரமன்றி அரசாங்க சேவையில் இளைப்பாறிய 5 லட்சம் பேருக்கான ஓய்வூதியக் கொடுப்பனவாக 112 பில்லியன் ரூபா செலவீனம் ஏற்படுகிறது.
அரசாங்க சேவையில் கவர்ச்சி காணப்படுகின்ற போதிலும், கிராமிய பிரதேசங்களில் பொருத்தமான அலுவலர்களைப் பெற்றுக்கொள்வது சவாலாகவே உள்ளது.
குறிப்பாக ஆசிரிய தொழிலுக்கு தகைமையானவர்கள் கிராமிய மைய வேலை நிகழ்ச்சித்திட்டங்களின் மூலம் அவ்வந்த பிரதேசங்களிலேயே ஆட்சேர்ப்பு செய்வதற்குத் தீர்மானித்துள்ளோம். நகரப் புறங்களில் தேவைக்கதிகமாக காணப்படும் அலுவலர்களை நகரத்தை அண்மித்த மற்றும் கிராமிய பிதேசங்களுக்கு மீள்நியமனம் செய்தல் மற்றும் வேறு மாவட்டங்களுக்கு இடம்மாற்றல் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையும் காணப்படுகிறது என்றார்.
அதேநேரம், நீதிபதிகள், பல்கலைக்கழக கல்விசார் ஊழியர்கள், மருத்துவ தொழிலாளர்கள் மற்றும் விசேட பங்களிப்புகளை வழங்கும் விசேட பகுதியினருக்கு புதிய கொடுப்பனவுகளை வரவு செலவுத்திட்ட வரையறைக்குள் தாங்கிக்கொள்ள முடியுமான வகையில் நடுத்தரக் காலத்தில் அவற்றினை நிலையாக பேணும் ஆற்றலுடன் 2013 ஆம் ஆண்டு ஜனவரியிலிருந்து செயற்படுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருப்பதாகவும் ஜனாதிபதி பாராளுமன்றத்தில் அறிவித்தார்.
Comments
Post a Comment